2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஆறாத வடுக்களும் அரசாங்கத்தின் கோழைத்தனமான தேடலும்

Editorial   / 2023 ஜூலை 20 , மு.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் திடீரென மரணமடைவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனால், நாட்டின் சுகாதாரத் துறையின் மீதான நம்பிக்கை மக்களிடத்தில் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது. இதற்கிடையே, இந்தப் பிரச்சினைக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, வைத்தியசாலைக்கு வரும் அனைவரையும் காப்பாற்ற முடியாது என்கிறார்.

பிறப்பு இருக்குமானால் இறப்பு இருக்கும் இது நியதி, எனினும், மருத்துவத்துறையின் கவனயீனம் காரணமாக அநியாயமான உயிரிழப்புகள் இடம்பெறுகின்றன. இதில், பிரதானமானவை காலவதியான மருந்துக்களை பயன்படுத்துவதாகும். இதனால், பச்சிளம் குழந்தைகள் கூட மரணமடைகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் விசாரணைக் குழுக்களை அமைத்து, அந்த அறிக்கை கிடைப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்பதற்கெல்லாம் எம்மால் பதில்சொல்ல முடியாது. காலங்கடந்த அறிக்கையால், பிரிந்த உயிர் திரும்பி கிடைக்கப்போவதில்லை. எனினும், அவ்வறிக்கையின் பரிந்துரைகள் எதிர்காலத்துக்கு முக்கியம்.

நமது நாட்டை மட்டுமன்றி, உலக பெருந்தொற்றாக பரவிய கொரோனாவால் தற்போதும் பாதிக்கப்படுவோர் இருக்கத்தான் செய்கின்றனர். இலங்கையில், இதுவரையிலும் 671,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து 654,910 பேர் மீண்டுள்ளனர். 38 பேர் தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு நான்கு புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். 18,808 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

இதில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரியூட்டியதன் ஊடாக, அவர்களின் மனங்களின் கடந்த அரசாங்கம் காயங்களை ஏற்படுத்தியது. அக்காயங்கள் வடுவாகவே இருக்கின்றன. பச்சிளம் குழந்தையைக்கூட சுடர்விட்டு எறிந்த தீயில் போட்டு கருக்கிவிட்டனர். அந்த சமூகத்தின் கடுமையான போராட்டத்தின் காரணமாக, பல மாதங்கள் கடந்தே புதைப்பதற்கான அனுமதி கிடைத்தது.

உலகளாவிய ரீதியில் பார்த்தோமெனில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டன. இங்குமட்டும் தான் எரியூட்டப்பட்டன. பல்லின, பல மத மற்றும் பல கலாசாரங்களை பின்பற்றி வாழுவோர் இருக்கும் இந்நாட்டில், அவர்களின் எந்தவோர் உரிமையையும் மதிக்காத வகையிலேயே கடந்த அரசாங்கம் செயற்பட்டது.

இதனால், உலக நாடுகளின் பலவற்றின் உதவிகளையும் இழந்துகொண்டது. எனினும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் அல்லாமல், இன்னுமின்னும் மதவேதனைகளை அதிகரிக்கும் வகையிலேயே அரசாங்கம் பதிலளித்துக் கொண்டிருக்கின்றது.

கொரோனா தொற்றினால் மரணமடைந்த  முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு பிழையான தீர்மானம் மேற்கொண்ட கொரோனா குழு அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சரவை மட்டத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உறுதியளித்தார்.

அன்றைய அமைச்சரவையிலும் அவர் இருந்தார். அதிகாரிகளின் தீர்மானங்கள் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டிருக்கும். இதனிடையே மீண்டும் விசாரணை செய்வது ஆறாத வடுக்களுக்கான கோழைத்தனமான தேடலாகும் என்பதே எமது அவதானிப்பு.  20.07.2023


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X