2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

அறுகம்பே அச்சுறுத்தலும் சுற்றுலாத்துறை மீதான பாதிப்புகளும்

Janu   / 2024 ஒக்டோபர் 27 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர், அதாவது, 2019 ஏப்ரல் 21ஆம் திகதி அன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டதன் பின், ஒரு சில பொருட்களின் விலைகள் குறைந்தது. எனினும், லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்த மேகம் சூழ்ந்து உள்ளமையால், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், யூதர்கள் மீது தாக்குதல் நடத்த ஈராக்கிலிருந்து இருவர் இலங்கைக்கு வருகைந்துள்ளதாக இந்திய புலனாய்வு துறையினர் விடுத்திருக்கும் எச்சரிக்கை, இலங்கையை கதிகலங்கச் செய்துள்ளது. அந்த எச்சரிக்கையை அசட்டையீனமாக எடுத்துவிட முடியாது. ஏனெனில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  நடத்தப்படுவதற்கு முன்னர் இந்திய புலனாய்வு பிரிவு இலங்கையை எச்சரித்திருந்தது.

அம்பாறை மாவட்டம், அறுகம்பேயில் வைத்து, இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதற்காக, இருவர் விலைபேசப்பட்டுள்ளனர். அவ்விருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அறுகம்பேயில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அறுகம்பேயில் மட்டுமன்றி, வெலிகம, கொழும்பு , எல்ல, ஆகிய பகுதிகளில் உள்ள யூத வழிபாட்டு நிலையங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியர்கள் பலரும், நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அமெரிக்கா, இந்தியா, கனடா, பிரித்தானியா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் தங்களுடைய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருட இறுதியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கும் புத்தாண்டு பிறப்புக்காகவும் காத்திருக்கும் நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கேள்விக்குறியாகி கொண்டு போகிறது. ஆகையால், சகல நாடுகளின் தூதரகங்களுக்கும், நமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தெளிவுப்படுத்தி, வெளிநாட்டு பிர​ஜைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது.

சுற்றுலா மூலம் 2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 2.17 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக இலங்கை  மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 66.1 சதவீதம் அதிகம் ஆகும்.

2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 1.36 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 50.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இலங்கையின் அந்நிய செலாவணி வருவாயை  ஈட்டித் தரும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். 2025ஆம் ஆண்டில் 30 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரக்கூடும் என இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் எதிர்பார்த்திருக்கும் நிலையில், பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உகந்த சூழல் சுற்றுலா துறையின் இந்த சாதகமான போக்குக்கு காரணம் 2024ஆம் ஆண்டில், இலங்கை சுற்றுலாத்துறையானது 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க 4 பில்லியன் டொலர்களுக்கு மேல் வருமானத்தை ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X