Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூன் 10 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்ததில், போருக்குப் பெரும் பங்கு உண்டு. மனித குலத்துக்கு முற்றிலும் எதிரான செயல் என்றாலும், இன்னமும் போர் நின்றபாடில்லை. ஏதோ ஒரு மூலையில் இந்த நிமிடம்கூட துப்பாக்கித் தோட்டாக்களும் அணுகுண்டுகளும் வெடித்துக்கொண்டிருக்கலாம். அதில் அப்பாவிக் குழந்தைகளும் பெண்களும் பலியாகலாம்.
உதாரணத்துக்கு, இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிரியாவின் உள்நாட்டுப் போரைச் சொல்லலாம். கடந்த சில வருடங்களாகவே சிரியாவில் போர் காரணமாக வீட்டையும் உயிரையும் இழந்த ஆயிரக்கணக்கானோரின் புகைப்படங்கள் வெளியாகி, பேரதிர்ச்சியை உண்டாக்கி வருகின்றன. அந்தப் புகைப்படங்கள் எல்லாம், போர் நிகழ்த்திய கொடுமைகளின் சிறு துளிதான். உண்மையில், அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை, ‘The Cave’ போன்ற ஆவணப்படங்கள்தான் சாட்சியாக நம் முன் காட்டுகின்றன.
யுத்தத்துக்கு நடுவில் உயிரைப் பொருட்படுத்தாமல், தன்னலமற்றுப் பணியாற்றிய ஒரு இளம் பெண் மருத்துவரின் சேவைப் பயணம்தான் இந்த ஆவணப்படம். போரின் துயரங்களை அருகிலிருந்து பார்த்ததைப் போன்ற ஓர் உணர்வைத் தரும் இதன் கதைக்குள் செல்வோம்.
ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடனேயே, திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்று, குடும்பத்தைக் கவனிப்பது மட்டுமே பெண்களுக்குரியது என்றும் வீட்டை விட்டு வெளியே வந்து, ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யக்கூடாது, அவர்களுக்குச் சமமாக நடக்கக்கூடாது போன்ற எழுதப்படாத விதிகள் இருக்கும் ஒரு சமூகத்தில் பிறந்தவர்தான் அமானி.
சிரியாவில் இருக்கும் சிறிய ஊரான கவுட்டா என்ற கிராமத்தில் பிறக்கு அமானி, குழந்தைநல மருத்துவராக வரவேண்டுமென்றே சிறு வயது முதல் கனவு கண்டிருந்தார். சுற்றியுள்ளவர்களின் ஏச்சு பேச்சுகளைத் துச்சமாக மதித்து, தன்னுடைய குறிக்கோளை நோக்கி வீறுநடை போட்டு, அதைச் சாதித்தும் காட்டினார்.
யுத்தத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, தலையில் அடிபட்ட 11 வயதுக் குழந்தைக்குத்தான், அமானி முதலில் சிகிச்சையளித்தார். இதுபோல யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றுகிறார். அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களும் யுத்தத்தின் அவலங்களும், காட்சிக் கோர்வைகளாக திரையில் விரிகின்றன.
நாம் கற்பனைகூட செய்துபார்க்க முடியாத அவலங்கள், ஒவ்வொன்றாக அரங்கேறுகின்றன. இப்படியெல்லாம் நிகழுமா, இவையெல்லாம் மனிதச் செயல்களா? போன்ற கேள்விகளுடன் ஒவ்வொரு காட்சியும் நகர்கிறது.
எந்த நேரமும் போர் விமானம் பறந்துகொண்டிருக்கும் சத்தமும் குண்டு வெடிப்பின் பயங்கரமும், குழந்தைகளின் ஓலமும் கேட்டுக்கொண்டிருக்கும் இடத்தில், ஒரு மருத்துவமனை இருக்கிறது. பெரிதாக எந்த வசதியும் அந்த மருத்துவமனையில் இல்லை. அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகூட இல்லாத நிலை. மருத்துவர்களுக்கு கூட சரியான உணவு கிடைப்பதில்லை. இப்படியான ஒரு மருத்துவமனையை நிர்வகிக்கிறார் அமானி. அங்கு சில ஆண் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
அமானியிடம் சிகிச்சை பெறவரும் ஆண்கள், “இங்கு ஆண் மருத்துவர் யாருமே இல்லையா, வீட்டில் இருக்க வேண்டியதுதானே, உங்களுக்கு இங்கே என்ன வேலை?” என்று ஏளனமாகக் கேட்கிறார்கள். போர் ஒரு பக்கம், பெண்கள் மீதான அடக்குமுறை இன்னொரு பக்கம் என இந்த இரண்டையும் சகித்துக்கொண்டு துணிச்சலுடன் சிகிச்சையளிக்கிறார் அமானி. போரின் தீவிரம் அதிகமாகிறது.
மருத்துவமனையின் மீது குண்டுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன. கெமிக்கல் குண்டுகள் குழந்தைகளைப் பதம் பார்க்கின்றன.
அடிபட்டவர்களை வரிசையாக அனுமதிக்கிறார்கள். மருத்துவமனை எங்கும் போரில் அடிபட்ட குழந்தைகளால் நிறைந்து கிடக்கிறது. அணுகுண்டுகள் மருத்துவமனையின் சுவர்களை சின்னாபின்னமாக்குகின்றன. என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போகிறார் அமானி. இருந்தாலும், தன் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.
தன்னை நாடி வருபவர்களுக்குப் பாதுகாப்பாக எப்படி சிகிச்சையளிக்கலாம் என்று யோசிக்கிறார். மருத்துவமனைக்குக் கீழே ஒரு குகையொன்றை அமைத்து, அதில் அடிபட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கிறார். அப்படி அடிபட்டவர்கள் எல்லோருமே குழந்தைகள் என்பதுதான் பெருந்துயரம். 2016 முதல் 2018 வரை, இந்தக் குகை மருத்துவமனையை அமானி நடத்தியிருக்கிறார்.
இந்த அசாதாரணச் சேவையைத்தான், இயக்குநர் ஃபெராஸ் ஃபயாத் திரைப்படமாக்கி இருக்கிறார். சிறந்த ஆவணப்படத்துக்கான ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்த ஆவணப்படம், உலகம் எங்கும் பல விருதுகளை அள்ளியிருக்கிறது. போரின் அவலத்தை இவ்வளவு நெருக்கமாக யாரும் படமாக்கியதில்லை என்று விமர்சகர்கள் புகழ்கின்றனர்.
-த.சக்திவேல்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago