Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 21 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவளை பெங்காக் விமான நிலையத்தில் சந்தித்தேன். வயது இருபத்தியெட்டு. ரொம்பவும் தெளிவான பிரகாசமான முகம். பார்த்தவுடனே தெரிந்த பெண்ணைப் போலவொரு தோற்றம். இந்தியாவுக்குச் செல்வதற்காக விமான நிலையத்தில் இருந்தாள்.
“பெங்காக்குக்கு எதற்கு வந்தாய்” எனக் கேட்டேன்.
“என்னுடைய தங்கையின் பதினெட்டாவது பிறந்த நாளுக்காக” என்று பதிலளித்தாள்.
இந்தப் பதில் அவளிடம் கேட்பதற்கான கேள்விகளைப் பெருக்கிவிட்டாலும் விமான நிலையத்தில் இருபது நிமிடத்துக்கு முன்பு சந்தித்துக் கொண்ட இருவர் எப்படி அத்தனை நெருக்கமாகச் சொந்த விடயங்களைப் பற்றி உரையாட முடியும்?
அவளுக்கோ அப்படியான எந்தத் தயக்கமுமில்லை. மிகவும் பக்குமாக வளர்க்கப்பட்டதற்கான அத்தனைக் குறியீடுகளையும் அவளில் காண முடிந்தது. ஏற்றுக் கொள்வதற்கும் எதையும் பகிர்ந்து கொள்வதற்கும் தயாரான முதிர்ச்சியோடிருந்தாள்.
“அம்மாவும் அப்பாவும் எனக்கு இரண்டு வயதாக இருந்தபோதே பிரிந்து விட்டார்கள்” என்பதை மிகச் சாதாரணமாகச் சொன்னாள்.
அதன் பிறகு அம்மா வேறு மணம் முடித்துக் கொள்ள, அப்பாவும் வேறு மணம் முடித்துக் கொண்டிருக்கிறார். மறுமணத்தில் அப்பாவுக்கும் பிள்ளைகள். அம்மாவுக்கும் பிள்ளைகள். அம்மாவின் மறுமணத்தில் கிடைத்த உறவான தங்கையின் பிறந்த நாளுக்காகத்தான் பெங்காக் வந்திருக்கிறாள்.
நமக்கு உடனடியாகத் தோன்றக் கூடியது என்ன? “ஐயோ பாவம் இவள்!” அல்லது “அம்மாவும் அப்பாவும் அவளுக்காக ”அட்ஜஸ்ட்” பண்ணியிருக்கலாம்” என்று மீட்க முடியாத கடந்த காலத்துக்கே ஆலோசகர்களாகிவிடுவோம்.
இந்த ஆலோசனைகளும் முன்முடிவுகளும் யதார்த்தத்துக்குப் புறம்பானது. யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வை அதன் திசையில் வாழுதல் என்ற கலையை நாம் முயற்சிக்கத் தயங்குகிறோம்.
அவளது அம்மாவும் அப்பாவும் யதார்த்தத்தின் ஆழ அர்த்தங்களைப் புரிந்தவர்களாக இருக்கவேண்டும். வாழ்வு என்பது சகித்துக் கொண்டு கிடப்பது மட்டுமல்ல, வாழ்தல் என்று செயற்படுத்தத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். அதன் பிரதிவிம்பமாகத் தான் அவர்களின் மகள் ஒரு சுதந்திரமான பெண்ணாக எந்த முறைப்பாடுகளும் குற்றவுணர்ச்சிகளும் இல்லாது வளர்ந்து நிற்கிறாள் என்று தோன்றியது.
அவளது அம்மாவும் அப்பாவும் சமூகம் எதிர்பார்ப்பதை விடவும் படித்தவர்கள் என்று அவளது பேச்சிலிருந்து தெரிந்து கொள்ளமுடிந்தது. தங்களுக்குள் ஒத்துப்போகாமல், நீண்ட காலம் உறவை இழுத்துப் போவதற்கான ஆத்மம் இல்லை என்று பிரிந்து விட்டாலும் குழந்தையின் பொறுப்பையும் கடமையையும் மிக நிதானமாக ஒருமித்துத் தீர்மானித்து செயற்படுத்திருயிருக்கிறார்கள்.
அம்மா மீது அதிக அன்பு கொண்டிருந்தாலும் அப்பாவை அவள் வெறுக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள நீண்ட நேரமாகவில்லை. அவளுக்கு அவர்கள் இருவரிலும் முறைப்பாடுகள் இல்லை. முறைப்பாடுகள் வராதபடியாக அவள் கவனிக்கப்பட்டிருந்தாள். நன்றாக படிக்கவைக்கப்பட்டிருக்கிறாள். அவளது படிப்பிலும் தீர்மானத்திலும் பிரிந்த அம்மாவும் அப்பாவும் இருந்திருக்கிறார்கள். அவளை வழிநடத்தியிருக்கிறாள். தங்களது “ஈகோ”க்களை விறுப்பு வெறுப்புகளையும் அவளில் சிறிதும் திணிக்காமல் தன்னியல்பாக வளர்த்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் “Broken Family” அதாவது அம்மாவோ அப்பாவோ விட்டுச் சென்றால் “பிறழ்ந்த குடும்பம்” என்ற அர்த்தத்தில், இப்படியான பிள்ளைகளின் நடத்தைகள், குணாதிசயங்கள் அனைத்தையும் குடும்பத்தவர்களின் உறவு பிரிவுகளோடு தொடர்புபடுத்தி, “இந்தக் குழந்தை பிறழ்ந்த குடும்பத்திலிருந்து வருகிறது. அப்பா விட்டுட்டு ஓடிட்டார். அம்மா விட்டுட்டு ஓடிட்டா. அதனால் தான் இப்படி அப்படி என்று குழந்தைகளின் நடத்தைக் கோலங்களுக்கு ஒரு விளக்கம் கொடுப்பார்கள். குடும்பத்தில் நிகழும் உறவும் பிரிவும் குழந்தைகளைப் பாதிப்பது நடக்கக் கூடியதுதான். குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வரையிலும், குறிப்பிடத்தக்க தெளிவுகளும் பதில்களும் கிடைக்கின்ற வரையிலும், தான் யார் என்கின்ற வெளிச்சத்தை மனதில் காண்கின்ற வரையில் பல விதமான குழப்பங்களும் நடத்தைச் சிக்கல்களும் உருவாகுவது இயல்பானது. அம்மா அப்பா இருவருடனும் இருந்தால்கூட இது உருவாக முடியும். ஆனால் தாயோடோ, தகப்பனோடோ வளராத குழந்தைகளின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் அதையே காரணமாகக் காட்டிக் கொண்டிருப்பது நம் வீடுகளில், பள்ளிகள் கல்லூரிகளில் மிகச் சாதாரணமாக நடப்பது.
தாயும் தகப்பனும் தெளிவானவர்களாக இருந்தால், வாழ்வில் பிடிப்புள்ளவர்களாக இருந்தால் இதையெல்லாம் புரிந்துகொண்டு கைபிடித்து நடக்கக் கூடிய ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் கல்லூரிகளும் அமைந்தால் குழந்தைகள் மனம் சிதையாமல் பத்திரமாக வளர்வார்கள் என்பதற்கு அசல் உதாரணம் இந்தப் பெண்.
கையிலிருந்த அலைபேசியில் இருந்த தங்கையின் பிறந்த நாள் படங்களை மகிழச்சியோடு காண்பித்தாள். இரண்டு மணி நேரத்தில் நாங்கள் முகநூல் கணக்குகளைப் பறிமாறிக் கொண்டு முகநூல் நண்பர்களாகவும் ஆகவிடுமளவுக்கு ஆளையாள் பிடித்துவிட்டது. அவளது முகநூல் பக்கத்தில் தங்கையை இறுக அணைத்துக் கொண்டிருக்கும் படத்தையே புரைபைல் பிக்சராக வைத்திருந்தாள். அதற்கு முன்னைய சில படங்களில் அவளது பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த அப்பாவையும் அவரது மகனையும் அணைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் படத்தை நான் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்ததும், “இது எனது தம்பி” என்று படத்தில் இருந்த பையனைத் தொட்டுக் காண்பித்தாள்.
நம் சமூகத்தில் பிரிந்து போன அப்பாவோ அம்மாவோ வேறு திருமணம் முடித்துவிட்டால் பிள்ளைகளிடம் இல்லாத பொல்லாத கதைகளை எல்லாம் சொல்லி முற்றாகப் பிரித்து வைப்பதைச் செய்வதையே பெரிய சாதனை என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். விட்டுப் போய் இன்னுமொரு திருமண உறவில் இணைய நேர்ந்தால் முன்னைய பந்தத்தில் உள்ள குழந்தைகளுக்குப் பராமரிப்புச் செலவாகப் பணம் தரவேண்டும் என்று பொறுப்பை ஏற்க வக்கற்று ஓடி ஓடி ஒளிந்து வாழ்கிற கோழைத்தனமான அற உணர்வற்ற ஆண்களும் இருக்கிறார்கள். இதனாலேயே இரண்டாவதாகத் திருமணம் செய்த கணவனிடம் கணக்குக் கேட்டுக் கொண்டு எந்நேரம் வரவு செலவுகளைக் கவனித்துக் கொண்டு இருக்கின்ற பெண்களும் இருக்கிறார்கள்.
அழகான வாழ்வையும் இனிமையும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும்படியாக ஆக்கக் கூடிய உறவுகளையும் எவ்வளவு சிக்கலாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் பெறுவதற்குத் தயாராக இருக்கின்றளவு விட்டுத் தருவதற்குத் தயாரில்லாத நிலைதானே நம் வாழ்வை கலைத்துப் போடுகின்றது! எல்லாமே நமக்கு நல்லதாகவே நடக்கவேண்டும். நல்லது செய்கின்றவர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதும் நம்புவதும் எத்தனை அப்பத்தமானது!
நாம் வாழும் இதே உலகத்தில்தானே அவர்களும் வாழ்கிறார்கள். அவர்களால் எப்படி குற்றங் குறைகளைக் கடந்து உறவையும் அன்பையும் மதிக்கவும் கொண்டாடவும் முடிகிறது? கலாசாரம், பண்பாடு என்ற அலங்காரத் தொங்கொட்டாண்களால் நம் வாழ்வு எவ்வளவு இறுக்கமாகியிருக்கிறது!
இதெல்லாம் சீரழிவைக் கோரும் மேலைத்தேய கலாசாரம் என்பார்கள். ஏற்றுக் கொள்வதும், விட்டுக் கொடுப்பதும் நமது கலாசாரத்தில் இல்லாததா? வாழ்வின் கலாசாரம் அதை வாழ்வதுதான் என்று புரிந்துகொள்ள ஏன் மறுக்கிறோம்?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago