2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘வெளியேறுவதற்கு நினைப்பது பலத்தைக் குறைப்பதற்கான செயல்’

Editorial   / 2017 நவம்பர் 07 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பலமாக இருக்கின்றபோது, சில கட்சிகள் அதன் பலத்தை உடைத்துக்கொண்டு, கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு நினைப்பது ஒட்டுமொத்தமாக, தமிழர்களின் பலத்தைக் குறைப்பதற்கான செயற்பாடாகும்” என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

“புதிய அரசமைப்பு இடைக்கால அறிக்கையை, தென்பகுதி பேரினவாதிகள் சிலர் நிராகரித்துவருவதுடன்,  அதற்கெதிராகப் பல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, வடக்கிலும் சில கட்சிகள் எதிர்த்துவருவதுடன், அதனைக் குழப்புவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவது வேதனையளிக்கின்றது” என்றும் அவர் தெரிவித்தார்.

தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை  மாலை நடைபெற்ற கல்வியில் மேலோங்கி உயர்பதவிகளை வகித்து பிரதேசத்துக்குப் பெருமை சேர்த்த மண்ணின் தோன்றல்களைக் கௌரவித்துப் பாராட்டும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தக் கௌரவிப்பு நிகழ்வு, தம்பிலுவில் பொருளாதார சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வைத்திய கலாநிதி பி.மோகனகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்றுமுழுதாக நிறைவுற்ற அறிக்கையல்ல. எனினும், வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கிடைத்த சிறந்த சந்தர்ப்பமாகவே இதனை நாம் கருத வேண்டும். இவ்வறிக்கையில் வடக்கு, கிழக்கு மக்கள் நலன் சார்ந்த பல விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. எமது மக்களின் நலனிலும் கூடிய அக்கறை செலுத்தப்பட்டுள்ளது. இதனையும் நாம் முறையாக பயன்படுத்தாவிட்டால் பாரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும்” எனக் கூறினார்.

“இவ்வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுகின்றபோதே, தமிழர்களின் ஏகோபித்த நோக்கத்தையும் இலக்கையும் அடைய முடியும். ஆகவே, தமிழர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும், தமிழ் சார்ந்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்” எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .