Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 17 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
செயிட் அஸ்லம்
“முஸ்லிம் சமூகத்தில் வசதி படைத்தவர்களினால் தமது மரண ஈடேற்றத்திற்காக சமூகம் நோக்கம் கருதி அன்பளிப்பு செய்யப்படுகின்ற சில வக்பு சொத்துகள் சரியான பரிபாலனம் இல்லாமல், சீரழிக்கப்படுவதும் தவறாக பயன்படுத்தப்படுவதும் கவலைக்குரிய விடயமாகும்.
“எனவே, வக்பு சொத்துகள் உரிய நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மெற்றோ பொலிட்டன் கல்லூரி ஒழுங்கு செய்திருந்த வருடாந்த இப்தார் வைபவம், மர்ஹூம் ஹஸ்ரத் யூ.எல்.எம்.காஸிம் மௌலவி தொடர்பான நினைவேந்தல் மற்றும் விஷேட துஆப் பிராத்தனை நிகழ்வுகள் கல்லூரியின் ஸ்தாபகத் தவிசாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில், சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்படி கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மத்தியில் ஏராளமான வசதி படைத்தவர்கள், பரோபகாரிகள் தம்முடைய மரண ஈடேற்றத்திற்காக மனவுவந்து வக்பு சொத்தாக விட்டுச் சென்றிருக்கின்ற பல சொத்துகளை சரியான பரிபாலனம் இல்லாமல், சீரழிந்து போக, தவறாக பயன்படுத்தப்படுகின்ற நிகழ்வுகள் ஏராளமாக நடந்து கொண்டிருக்கின்றன.
“அண்மைக்காலமாக பேசப்படுகின்ற இந்த கபூரியா அரபுக் கல்லூரியின் வக்பு சொத்துகள் எம்.கே.எச். அப்துல் கபூர் எனப்படுகின்ற கொழும்பின் பெரும் கோடீஸ்வர வர்த்தகரினால் அன்பளிப்பு செய்யப்பட்டவையாகும். அவற்றுள் மிக முக்கியமான சொத்து மஹரகம பகுதியில் 17.5 ஏக்கர் காணியை இக்கல்லூரிக்கென வழங்கியிருப்பதுடன், தலைநகரில் அமைந்துள்ள சுலைமான் வைத்தியசாலையையும் கிராண்ட்பாஸ் பகுதியில் இரண்டரை ஏக்கர் காணியையும் கல்லூரியின் பரிபாலனத்திற்காக அவர் வக்பு செய்திருந்தார்.
“ஆனால், இந்த வக்பு சொத்துகள் இன்று அப்துல் கபூர் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் இடையில் பெரும் சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டு, நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
“இந்நிலையில், வக்பு செய்தவரின் நோக்கத்திற்கு மாறான நிலைப்பாடுகளை எடுப்பதைத் தவிர்த்து, இதனை சுமூகமாக தீர்ப்பதற்குரிய சில சட்டத்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் கூடிய அவதானம் செலுத்தி, ஆலோசித்து வருகின்றோம்”- என்றார். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago
21 Apr 2025
21 Apr 2025