2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யானைகள் அட்டகாசம்; மயக்கமுற்ற பெண் வைத்தியசாலையில்

வி.சுகிர்தகுமார்   / 2017 நவம்பர் 04 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யானைகளின் தாக்குதலுக்கு இலக்கான வீடொன்றின் சுவர் வீழ்ந்ததில் வீட்டினுள் இருந்த பெண்ணொருவர், சுவருக்குள் அகப்பட்டு, மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகிகிராமம் பிரதேசத்திலே, இன்று (04) அதிகாலை, இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவத்தில் கண்ணகிகராமம் 2ஆம் பிரிவை சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயாரான 55 வயதுடைய த.யோகேஸ்வரி என்பரே காயங்களுடன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, வீட்டு உடைமைகளும் யானைகளால் நாசமாக்கப்பட்டுள்ளன.

அதிகாலை வேளை, கிராமத்தில் உட்புகுந்த நான்கு யானைகள், குறித்த வீட்டை நெருங்கியதும் கால்நடைகள் உட்புகுந்துள்ளதாக நினைத்த குறித்த பெண், கூச்சல் போட்டு அவற்றைத் துரத்துவதற்கு முயற்சித்துள்ளார்.

ஆயினும், யானைகள் வீட்டின் சுவரை உடைத்த நிலையில் சுவருக்குள், அப்பெண் அகப்பட்டுள்ளார்.

இதனைக் கண்ணுற்ற அயலவர்கள், யானைகளைத் துரத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதன் பின்னர், சுவருக்குள் அகப்பட்டு மயக்கமுற்ற நிலையிலிருந்த பெண்ணை, உடன் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் மகளும் நேரில் கண்ட அயலவர்களும், சம்பவம் தொடர்பில் கவலையுடன் தங்களது கருத்துகளை ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

அத்தோடு, சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு இன்று காலை சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நிலைமையை நேரில் கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு கவலையைத் தெரிவித்தார். அத்துடன், அனைத்து உதவிகளையும் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை யானைகளின் தாக்குதலால் உயிர்கள் பலியாவதுடன், உடைமைகளும் அழிக்கப்படுகின்றன. அரசாங்கம், யானை வேலியை அமைப்பதற்கான அனைத்து நிதியொதுக்கீட்டைச் செய்துள்ள போதிலும், அதனைப் பொறுப்பேற்றவர்கள் இதுவரையில் அப்பணியை நிறைவு செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், யானை வேலி அமைக்கும் பணியை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .