2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘திருப்தியான அரசமைப்புக்கான முயற்சி தொடர்கின்றது’

வி.சுகிர்தகுமார்   / 2017 நவம்பர் 13 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழ் மக்களைத் திருப்தி செய்ய கூடிய அரசமைப்பு ஒன்றை அடைவதற்குரிய முயற்சிகளைத் தொடர்ந்தும் நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்” என, தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

அம்பாறை, பொத்துவில் தொகுதி தமிழரசுக்கட்சிக் கிளையினுடைய பொதுச் சபை கூட்டம், ஆலையடிவேம்பு பிரதேச சபை நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரவித்ததாவது,

“உருவாக்கப்பட்டுள்ள அரசமைப்புச் சட்டத்திலே, அதிகார பரவலாக்கல் என்பதும் வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் கைவாங்கப்பட முடியாத வகையிலான பொறிமுறைகளும் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அதனை நிறைவேற்றுவதற்கான வேலைப்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அரசமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பிலே நடவடிக்கை குழு உறுப்பினர்களான தலைவர் சம்மந்தன் ஜயா மற்றும் சுமந்திரன் ஆகியோர் அதிகமான பணிகளைச் செய்திருக்கின்றார்கள்.

“யார், என்ன கூறினாலும் தற்போது உள்ள நிலையில், தமிழர்கள் அதியுச்ச நன்மைகளையும் அதிகாரங்களையும் பெற்றுக்கொள்ள கூடிய வகையிலான செயற்பாடுகளையும் அவர்கள் முன்னெடுத்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் தொடராக நடைபெற்றுவருகின்றன” என்றார்.

முன்னாள் செயலாளர் ம.காளிதாசன் ஏற்பாட்டில் அதிபர் இ.கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் இறுதியில் பொத்துவில் தொகுதிக் கிளைக்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

அதற்கமைய, தலைவராக அ.கலாநேசன், செயலாளராக க.இரத்தினவேல், உபதலைவராக சி.சுந்தரலிங்கம், உபசெயலாளராக த.தவராஜா, பொருளாளராக அ.தட்சணாமூர்த்தி உள்ளிட்ட வட்டாரப் பிரதிநிதிகளும் தெரிவுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .