2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அக்கரைப்பற்று பொலிஸில் 3,264 குற்றச்செயல் முறைப்பாடுகள்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 நவம்பர் 22 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் தமது கடமைக்கும் மேலாக சமூகப் பொறுப்புடனும் செயற்பட வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்ப்பார்க்கின்ற இலக்கினை விரைவாக அடைந்து கொள்ள முடியும்” என, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார்.

 

அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களின் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கான மாநாட்டிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.பி. சமன் குமாரவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

“சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் தமது பிரிவிலும், சமூகத்தின் மத்தியிலும் முன்மாதரியானவர்களாகவும், பக்கசார்பின்மையானவர்களாகவும் செயற்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் நம்பிக்கையுள்ளவர்களாகவும், செல்வாக்குள்ளவர்களாக மிளிர முடியும்.

“இன்று சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடு அசமந்த நிலையிலேயே காணப்படுகின்றது. பெண்கள், சிறுவர்கள் இரவில் சுதந்திரமாக சென்று வரக் கூடிய கூடிய நிலை இன்னும் பூரணமாக தோன்றவில்லை.

“போதைப்பொருள் பாவனை, துஷ்பிரயோகங்கள், வன்முறைகள், பயங்கரவாத சூழல் இன்னும் குறைவதாக இல்லை. மாறாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என்றால் எமது பணியின் பெறுமானம் என்ன?

“அக்கரைப்பற்று பொலிஸ பிரிவில் கடந்த வருடத்தில் மாத்திரம் போதைப்பொருள் தொடர்பாக 133 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மேலும், இதே ஆண்டில் விபத்துகளும் அதிகரிதுள்ளன.

“இவ்வாண்டில் மாத்திரம் பிரச்சினைகள் மற்றும் சச்சரவுகள், குற்றச்செயல்கள் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மாத்திரம் 3,264 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“மேலும், விபத்துகள், தலைக்கவசமின்றிய குற்றச்சாட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை போன்றன தொடர்பில் 3,256 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“இவ்வாறு குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்லும் போது, இப்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் சுமார் 100 பொலிஸ் உத்தியோகத்தர்களால் அனைத்து பணிகளையும் உரிய காலப்பகுதிக்குள் செய்து விட முடியாது.

“எனவே, தங்களது பிரிவுகளில் ஏற்படுகம் சமூகப் பிரச்சினைகள், போதைப்பொருள் பாவனை, குற்றச் செயல்கள், சிறுவர், பெண்கள் தொடர்பான துஷ்பிரயோயகங்கள், வன்முறைகள் போன்றனவற்றை தடுப்பதற்கான விழிப்புணர்வுகள், மார்க்க போதனைகளை நடத்துவதுடன், பொலிஸாருக்கு இது தொடர்பான தகவல்களையும் வழங்கி உதவ முன்வர வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .