2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

’பூமியில் விழும் ஒவ்வொரு துளி நீரையும் வீணாக்கோம்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

‘‘ஆகாயத்திலிருந்து பூமியில் விழும் ஒவ்வொரு துளி நீரையும் நாட்டு மக்களது பாவனைக்குப் பயன்படுத்தாது, வெறுமனே கடலில் சேர இடமளிக்க மாட்டேன்” என்பது இலங்கையை ஆட்சிசெய்த பராக்கிரமபாகு மன்னனின் அர்த்தம் பொதிந்த வார்த்தையாகும். எனினும்,  உலகளாவிய ரீதியில் வரட்சியின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், எத்தனை நாடுகளின் ஆட்சியாளர்கள் இது குறித்து அக்கறையுடன் செயற்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியே.

பூமியின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டிருந்தாலும், இன்று மனிதன் முகங்கொடுக்கும் பாரிய பிரச்சினையாக வரட்சி மற்றும் குடிநீர்ப் பற்றாக்குறை ஆகியவை காணப்படுவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

வரட்சி என்பது இன்று உலகளாவிய ரீதியில் முக்கியம் பெறுகின்ற சூழற்பிரச்சினையாக காணப்படுகின்றது. நீண்ட காலத்துக்கு மழைவீழ்ச்சி கிடைக்காமையால் ஏற்படும் நிலையே வரட்சி என வரைவிலக்கணப்படுத்த முடியும். எனினும், வரட்சி பற்றிய திட்டமான வரையறை காலத்துக்குக் காலம், நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுகின்றது.

உதாரணமாக, 180 மில்லிமீற்றரை விட மழைவீழ்ச்சி குறையும் போதே அது வரட்சியாக லிபியாவில் கருதப்படும். அமெரிக்காவில் 2 தினங்களுக்குள் 2.5 மில்லிமீற்றருக்கு குறைவான மழைவீழ்ச்சி கிடைத்தால் அதனை வரட்சி என்று கூறுவார்கள். எனினும், இலங்கையில் 75% இலும் குறைவிலான மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால்தான் வரட்சி என அடையாளப்படுத்தப்படுகின்றது.

குறைவான மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறும்போது வானிலை சார் வரட்சி ஏற்படுகின்றது. மண்ணில் உள்ள மண்ணீரானது குறைவடைகின்ற போது விவசாய பாதிப்பு ஏற்படும் . இதனை விவசாய வரட்சி  என அழைப்பார்கள் . ஆறுகள், குளங்கள் ஆகியன வற்றுதலினை நீரியல் வரட்சி என்பதுடன்,  வானியல் வரட்சி , விவசாய வரட்சி , நீரியல் வரட்சி ஆகிய மூன்றும் சேர்ந்தது சமூக பொருளாதார வரட்சி ஆகும்.

குறைவான மழைவீழ்ச்சி , காடழிப்பு ,பூகோள வெப்பநிலை அதிகரிப்பு, முறையற்ற நிலப்பயன்பாடு,கட்டட நிர்மாணம், நீர் தேக்கத்தில் நீரில் அளவு குறைவடைதல் உள்ளிட்ட பல காரணங்களினால் வரட்சி ஏற்படுவதுடன், விவசாய பாதிப்பு, காட்டுத்தீ, பசி, பட்டினி, இடப்பெயர்வு, கால்நடைகள் அழிவடைதல், நீர்பற்றாக்குறை, தூசி புயல் ஏற்படும், மின்சார உற்பத்தி தடைப்படும், கைத்தொழில் பாதிப்பு, மீன்பிடி பாதிப்பு என வரட்சியின் பாதிப்புக்களை பட்டியலிட்டுக்கொண்டே செல்லமுடியும்.

இவ்வாறான ஒரு நிலையில் வரட்சி முகாமைத்துவம் பற்றி பார்க்கும் போது, முன் அனர்த்த முகாமைத்துவம், நீரைச் சிக்கனமாக பயன்படுத்துதல், காடுகளினை அழியாது பாதுகாத்தல், நீர்நிலை மாசடையாது பாதுகாத்தல், மழைநீரினை சேமித்தல், காடுகளை மீள் உருவாக்கல், வரட்சியை தாங்கிக்கொள்ளக் கூடிய பயிர்களை நடுதல் உள்ளிட்ட விடயங்களில் அவதானம் செலுத்தப்படுகின்றது.

வரட்சியால் ஏற்படும் பாதிப்புகளில் நீர் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாகியுள்ளதுடன்,  அதற்கான தீர்வுகள் பற்றி யோசிக்கும்போது மழைநீர் சேகரிப்பைப் புறந்தள்ளிவிட முடியாது. மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்துக்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம்.

வீடுகள், நிறுவனங்களின் கட்டடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.

சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம் என்பதுடன், இத்திட்டம் உள்ளூரிலேயே கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களைக் கொண்டு எளிதாகக் கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தக்கூடியது.

இவ்வாறானதொரு திட்டம்தான் இலங்கையில் வரட்சி மற்றும் வெள்ளப் பாதிப்புகொண்ட நான்கு மாவட்டங்களில் வெற்றிகரமான செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின் ஊடாக, கிளிநொச்சி, பதுளை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை மாற்றமடைந்துள்ளது, பூர்த்தியடையும் நிலையிலுள்ள இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையத்தின் நீர் சேகரிப்புச் செயற்றிட்டத்தின் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் மற்றும் வரட்சிப் பாதிப்புகொண்ட பகுதிகளுக்கு பாதுகாப்பான அனர்த்தத் தாங்குதிறன் கொண்ட குடிநீர் வழங்குவதற்கான மூன்று வருடச் செயல்திட்டம் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

வரட்சியால் பாதிப்புகளை அதிகமாக எதிர்நோக்கும் சமூகங்களுக்கு கூடுதல் வினைத்திறனான வகையில் அனர்த்தத் தாங்குதிறன் கொண்ட நீர் விநியோகங்களை அளிப்பதற்கும், அனர்த்தப் பாதிப்புகொண்ட சமூகங்களின் செயற்றிறனை வலுப்படுத்துவதற்கும், வெள்ளம் மற்றும் வரட்சி முகாமைத்துவம் தொடர்பான அனர்த்த இடர் தணிப்புக்  கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் என்பவற்றை ஸ்தாபித்தல் என்பன இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும்.

பாம் நிறுவனத்துடனான (PALM Foundation) பங்குடமையின் கீழ் இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையத்தினால் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டமானது, வெள்ளம் மற்றும் வரட்சி முகாமைத்துவக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பானதும், அனர்த்தத் தாங்குதிறன் கொண்ட குடிநீரை வழங்குவதற்கு அதிகாரிகள், தொழில்சார் தகைமையாளர்கள் மற்றும் சமூகங்களின் செயற்றிறனைக் கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை எடுப்பதுடன், இதற்கு  யுஎஸ்எய்ட் (USAID) நிதியுதவி வழங்குகின்றது.

இந்த இடத்தில் இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையம் பற்றிப் பார்ப்பது அவசியமாகின்றது. இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையமானது, வீட்டுப் பாவனைக்காக மழைநீர் சேகரிப்பதில் ஆர்வங்கொண்ட மக்களின் ஒரு சிறிய குழுவினால், ஓர் உத்தியோகபூர்வமற்ற வகையில் 1996ஆம் ஆண்டு   உருவாக்கப்பட்டதுடன்,  மழைநீர் சேகரிப்பை முன்னேற்றுவதற்கும், ஆய்வு செய்வதற்கு மற்றும் அதனை பேணுவதற்கும்  தொழில்சார் தகைமையாளர்கள் மற்றும் செய்முறைப்படுத்துவோர்களை ஒன்றிணைப்பதே இதன் பிரதான நோக்கமாக காணப்பட்டது.

இன்று, அது சமூக சேவைகள் அமைச்சின் கீழ் ஒரு சமூக சேவைகள் ஸ்தாபனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் 23 வருட காலப் பயணத்தில், இ.ம.நீ.சே.அ ஆல் பெற்றுக்கொண்ட அனுபவம், கிராமிய வீட்டுத் தேவை நீர் வழங்கலுக்கான ஒரு சாத்தியமானதும் மற்றும் நடைமுறை ரீதியில் சாத்தியமாகும் ஒரு தீர்வாக மழைநீர் சேகரித்தலை அரசாங்கமும் ஏனைய அக்கறை கொண்டவர்களும் கருதுவதை சாத்தியப்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 391 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 17,900 பேர் இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையத்தின் செயல்திட்டத்தின் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தால் பயனடைந்துள்ளனர்.

48 பாடசாலைகள் மற்றும் பத்து மருத்துவச் சிகிச்சை நிலையங்கள் என்பவற்றில் மழைநீர் சேகரிப்பு தாங்கிகள் நிறுவப்பட்டுள்ளன. களஞ்சியப்படுத்துதல் மற்றும் கொள்திறன் என்பவற்றின் அடிப்படையில், 8,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட களஞ்சியப் படுத்தும் தாங்கிகள் வீட்டுப் பாவனைக்காக ஊக்குவிக்கப்படுகின்றன.

10,000 இலிருந்து 16,000 லீற்றர்கள் வரையான கொள்ளளவுத் தாங்கிகள் வைத்தியசாலைகளுக்கும் 30,000 லீற்றர் கொள்ளளவுத் தாங்கிகள் பாடசாலைகளுக்கும் ஊக்குவிக்கப்பட்டன.

900 மில்லிமீற்றருக்கும் குறைவான வருடாந்த மழை வீழ்ச்சியைப் பெற்றுக் கொள்ளும் உலர் வலயத்திலுள்ள ஒரு வீட்டுப் பாவனைக்கான மழைநீர் சேகரிப்புத் தாங்கி, 50 சதுரமீற்றர் பரப்புகொண்ட ஒரு சிறிய வீட்டுக் கூரை நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து, வரட்சிக் காலங்களின் போது வீட்டுக்கு நாளாந்தம் அவசியமான சமையல் மற்றும் குடிநீருக்கான 60-70 லீற்றர்கள் தண்ணீர்த் தேவையைத் திருப்திப்படுத்துவதற்கு முடியும். 

இச்செயற்றிட்டத்தின் கீழ் இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையத்துடன், கூட்டிணைந்து கொள்ளும் பாம் நிறுவனம், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 25 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து 4,200 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதுடன் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தியுள்ளது.

தூய குடிநீர் வசதிகள் 54 அரசாங்கப் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு, சுமார் 10000 மாணவர்கள் பயனடைவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளது.  இந்தச் செயலகப் பிரிவுகள் கூடுதலான வெள்ளப் பாதிப்புக் கொண்டவை என்பதுடன் இங்கு மிகவும் இடரேதுநிலை கொண்டவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களாகும்.

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதிலுமாக தனியே 30 சதவீத குடும்பங்கள் மாத்திரமே குழாய் நீர் இணைப்பு வசதி கொண்டவை என்பதுடன் அவர்களுள் பலர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மூலமான நீரிணைப்புக்கு வசதியில்லாதவர்களாக உள்ளனர்.

இருக்கும் சில பிரதான நீர் குழாய்கள் இந்த இடரேதுநிலை கொண்ட பகுதிகளுக்கு இணைக்கப்படவில்லை என்பது அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக காணப்படுகின்றது.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் ஊடாக, மழைநீர் அது விழும் மேற்பரப்புகளிலிருந்து சேகரிக்கப்பட்டு, பின், பின்னைய தேவைகளுக்காக களஞ்சியப்படுத்தப்படுகிறது. மழைநீர் களஞ்சியப்படுத்தலுக்கான உபகரணங்கள்,  மீள்வலுவளிக்கப்பட்ட கான்கிரீட் சீமெந்து, மேசன் தயாரிப்பு, பெரோ சீமெந்து அல்லது பிளாஸ்டிக் போன்ற பல்வேறு பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மழை நீரை களஞ்சியப்படுத்தும் தாங்கிகள் தரைக்கு மேல், தரைக்கு கீழ் அல்லது பகுதியளவில் தரைக்கு கீழ் வைக்கப்ப்படுகின்றன.

'மழைநீர் சேகரித்தல்  என்பது எங்களது நாட்டிற்கு புதிதான ஒரு முறையல்ல. மனிதப் பாவனைக்கு உபயோகிக்காது ஒரு துளி மழைநீரையும் வீணாகக் கடலிற்கு செல்ல விடவேண்டாம் எனக் கூறிய பராக்கிரமாபாகு மன்னனால் மழைநீர் சேகரித்தலுக்கான முதல் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இன்னமும் தொடர்ந்தும் வளமளிக்கின்ற இந்தத் தொழில்நுட்ப முறைமையின் வாழும் உதாரணங்களே நீர்ப்பாசன நிபுணத்துவர்களான எங்களது புராதான மன்னர்களாவர். காலநிலை மாற்றம் முன்னர் போல சாதகமாக இல்லாத ஒரு சமயத்தில் நவீன நிலைப்பாட்டிற்கு அத்தகையதொரு நிலையை மீளுருவாக்குவதற்காக அந்தக் காலகட்டத்திற்கு மீள்விஜயம் செய்வதற்கே நாங்கள் முயற்சிக்கிறோம்' என, இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி, கலாநிதி. தனுஜா ஆரியநந்தா, தெரிவிக்கின்றார்.

வரட்சியாக பகுதிகளில் குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்கு பல்வேறு முறைகளை முன்னெடுத்தாலும், அந்த திட்டங்களுக்கு பாரிய நிதி தேவைப்படுவதுடன், அதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி முறையான விதத்தில் பயன்படுத்தப்பட்டு அதன் பலன்கள் மக்களுக்கு சென்றடைகின்றதா என்பது கேள்விக்குறியே. உலகின் பல நாடுகளில் மனித பாவனைக்கு உகந்த நீரினைப் பெற்றுக்கொடுப்பது பாரிய சவாலான ஒன்றாக காணப்படுவதுடன், வீணாக கடலை சென்டையும் நீர் மற்றும் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செல்வம் கொழிக்கும் நாடுகளில் இவ்வாறான திட்டங்களுக்கு தடையின்றி நிதியுதவிகள் கிடைக்கப்பெறும் நிலையில், எம்மை போன்ற நாடுகளில் அதற்கான சாத்தியப்பாடு கீழ்மட்டத்திலேயே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், குறைந்த செலவில் நீரினை பெற்றுக்கொள்ளக்கூடிய மழை நீர் சேகரிப்பு திட்டமானது அதிகளவில் பயன்தரும் ஒன்றாக காணப்படுகின்றது. மழை நீரைச் சேகரித்து வைத்து பின்னர் பயன்படுத்துவதற்காக முன்னோர்கள் உருவாக்கிய வாவிகள், குளங்கள் இன்று பாதிப்புக்கு உள்ளாகி பாராமுகமாக உள்ளதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். புதிய குளங்களையோ வாவிகளையோ நவீன ஆட்சியாளர்கள் உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாத இவ்வாறான ஒரு சூழ்நிலையில், கிராம மக்களின் அடிப்படை நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு இவ்வாறான இலகு திட்டங்கள்

முன்னெடுக்கப்படுகின்றமை பாராட்டுக்கு உரிய ஒன்றாகும். நீர்பற்றாக்குறை அதிரிக்கும் எதிர்காலத்தில் நீருக்கான சந்தை பெறுமதி அதிரிக்கும் என்பதும், உழைப்பின் பெரும்பகுதியை மக்கள் நீருக்கான செலவிட வேண்டி ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது.

மழைநீரை சேரித்துவிட்டால் நீருக்கு வி்லையை நீக்கிவிடலாம்!

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .