Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

தமிழ் அரசியல் கைதிகள் எந்நேரத்திலும் கொல்லப்படலாம் என்ற நிலைமையே நாட்டில் காணப்படுகின்றது: சுரேஸ் எம்.பி


'எல்லா சிறைச்சாலைகளிலும் 'சிறைக் கைதிகளும் மனிதர்களே' என்று எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகள் எக்காலத்திலும் அவர்களுக்கு மனிதர்களாகத் தெரிவதில்லை. அவர்கள் எந்தவிதமான சூழ்நிலையிலும் கொல்லப்படலாம் என்ற துர்பாக்கிய நிலைமையே அங்கு காணப்படுகின்றது' என்று தமிழத் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

'எனவே, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதோடு அவர்கள் மீதான தாக்குதல், படுகொலைக்கு காரணமானவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். இந்த விடயங்கள் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். சர்வதேச மன்னிப்புச் சபைக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும். இவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

கறுப்பு ஜூலையை முன்னிட்டும் நிமலரூபன் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் 'அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு' ஏற்பாடு செய்த நிகழ்வொன்று கொழும்பு பொது நூலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

இதில், மனோ கணேசன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், குமரகுருபரன், பாஸ்கரா, விக்கிரமபாகு கருணாரத்ன, அருட்தந்தை சக்திவேல் உட்பட பல்வேறு பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது மறைந்த நிமலரூபனுக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து அனைவர் மத்தியிலும் உரையாற்றிய சுரேஸ் எம்.பி கூறுகையில்,

'அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அத்துடன், கைதிகளின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்துவித நடவடிக்கைகளின் போதும் அவர்களின் விடுதலைக்கான கோரிக்கை அரசாங்கத்திடம் பலமுறை முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை இதற்காக அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும்.

மிக மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றார்கள். முதலமைச்சர்களாக இருக்கின்றார்கள். இன்னும் பல்வேறு பதவிகளை வகிக்கும் முக்கியஸ்தர்களாகக் காணப்படுகின்றார்கள். அதேசமயம், எந்தவிதமான தவறுகளையும் செய்யாதவர்கள் புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்ட நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதான கவலைக்குரிய விடயத்தை நாம் பார்க்கக்கூடியதாக உள்ளது.

ஆகவே சிறைக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். வவுனியா சிறைச்சாலைக் கைதிகள் மிகவும் கோரமான முறையில் தாக்கப்பட்டதன் காரணமாக நிமலரூபன் கொல்லப்பட்டார். மரியதாஸ் என்பவர் கோமா நிலையில் காணப்படுகின்றார். இன்னும் பலருடைய கைகள், கால்கள் உடைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இது தொடர்பில் இதுவரையில் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த கொலை தொடர்பாக, இந்த தாக்குதல்கள் தொடர்பாக, இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் தொடர்பாக அல்லது, இந்த சம்பவத்துக்கான காரண காரியங்கள் தொடர்பாக என்ன விசாரணை இதுவரையில் நடைபெற்றுள்ளது?

இங்கு நடைபெறுவது உண்மையான ஆட்சியா? அல்லது காட்டாட்சியா என்று கேட்கும் அளவுக்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வளவு நடந்தும் கூட இந்த அரசாங்கத்தினால், நீதித்துறையினால் அல்லது சிறைச்சாலை அமைச்சினால் எந்தவித விசாரணையும் நடத்தப்படாத ஒரு துர்பாக்கிய நிலையில் தான் இந்த நாடு இருக்கின்றது. ஆகவே இந்த நாடு எதனை நோக்கிப் போகின்றது என்பதை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

நேற்றைய தினம், பொத்துவிலில் கடந்த 80 வருடங்களாக இருந்த ஒரு பிள்ளையார் சிலை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டு புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களுக்கு போய் தொழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு சம்பவங்கள் தற்போது இந்த நாட்டில் இடம்பெற்று வருகின்றன. ஆகவே இந்த நாட்டில் மதச் சுதந்திரம் கூட அற்றுப்போயுள்ளது.

எல்லா சிறைச்சாலைகளிலும் சிறைக் கைதிகளும் மனிதர்கள் என்று எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகள் எக்காலத்திலும் அவர்களுக்கு மனிதர்களாகத் தெரிவதில்லை. அவர்கள் எந்தவிதமான சூழ்நிலையிலும் கொல்லப்படலாம் என்ற துர்பாக்கிய நிலைமையே அங்கு காணப்படுகின்றது.

ஆகவே இந்த நிலைமையை நீடிக்கச் செய்வதென்பது இந்த நாட்டை மிக மோசமான நிலைமைக்கு தள்ளிவிட வாய்ப்பளிக்கும். அரசாங்கம் விரும்பினால், ஜனாதிபதி விரும்பினால், பாதுகாப்பு செயலாளர் விரும்பினால் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அவர்களை யாரும் எந்தவொரு கேள்வியும் கேட்க முடியாது என்ற நிலைமையில் நாம் இருக்கின்றோம். இது எமது நாட்டின் எதிர்காலத்தை சீரழித்துவிடும்.

எனவே, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதோடு அவர்கள் மீதான தாக்குதல், படுகொலைக்கு காரணமானவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். இந்த விடயங்கள் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். சர்வதேச மன்னிப்புச் சபைக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும். இவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். இதற்காக எந்தவிதமான இன, மத, குல வேறுபாடுகள் இன்றி நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்' என்றார்.
Views: 1002

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.