கிரேக்க பிணைகளில் முதலீடு செய்து 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கி மீது இன்று குற்றஞ்சாட்டியுள்ளார். வேறு நாடுகளின் பிணைகளில் செய்த முதலீடுகள் இலாபம் தந்துள்ளபடியால் இந்த இழப்பு புறக்கணிக்கத்தக்கதென மத்திய வங்கி கூறுவதை ஏற்கமுடியாது என அவர் கூறினார்.
ஓவ்வொரு முதலீடும் தனித்தனியாக எடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சரி பார்க்கப்பட வேண்டும். கிரேக்க பிணைகளில் முதலீடு செய்ய முன் வழமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
கிரேக்க பொருளாதாரம் மிக மோசமாக இருந்து வருவது யாவரும் அறிந்த உண்மை. உண்மை நிலைமையை அறிந்துகொண்ட பலர் தம்வசமிருந்த கிரேக்க பிணைகளை விற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் இலங்கை பிணைகளை வாங்கியுள்ளது.
கிரேக்க பிணைகளில் முதலீடு செய்தமையால் அரசாங்கம் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டமடைந்ததை சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம ஏற்றுக்கொண்டுள்ளார்.
மத்திய வங்கி கிரேக்க பிணைகளின் ஒரு பகுதியை 5 மில்லியன் யூரோவுக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் விற்றது. இதனால் ஏற்படவிருந்த நட்டத்தில் ஒரு பகுதி குறைக்கப்பட்டது என அமைச்சர் கூறினார்.
கிரேக்க முதலீடு செய்யப்பட்டு சில வாரங்களின் பின் யூரோ வலயத்தில் பிரச்சினை உண்டானபோது இவ்வாறான முற்பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் நட்டம் குறைக்கப்பட்டது என அமுனுகம கூறினார்.
எவ்வாறாயினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வெளிநாட்டு முதலீடுகள் காரணமாக கடந்த வருடம் இலங்கை 430 மில்லியன் டொலர் இலாபம் பெற்றுள்ளது என அவர் கூறினார்.
.gif)
