டயலொக் டெலிகொம் நிறுவனத்திற்கு தொலைபேசி பாவனைக்கான கட்டமாக 35 லட்சம் ரூபாவை பற்றுவைத்துவிட்டு, நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டுக்குள்ளான செல்லிட தொலைபேசிசேவை வாடிக்கையாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.இரத்மலானையைச் சேர்ந்த இச்சந்தேக நபர், 3.5 மில்லியன் ரூபா கட்டணத்தை மோசடி செய்ததாக டயலொக் டெலிகொம் நிறுவனத்தின் கடன் முகாமையாளரினால் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி நபரிடம் 21.04.2010 ஆம் திகதியளவில் 21,500 ரூபா வைப்புப் பணம் பெற்றுக்கொண்டு அவருக்கு ரோமிங் வசதி வழங்கப்பட்டதாக முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்தார். மேற்படி சிம் அட்டையை மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்படக்கூடாது எனவும் சட்டவிரோத நடவடிக்கைகக்கு பயன்படு;த்தக்கூடாது எனவும் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை இவ்வாடிக்கையாளர் மீறிவிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2010 ஏப்ரல் முதல் 14.05.2010 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இப்பெருந்தொகை கட்டணத்தை அவர் மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நேற்று கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேக நபரின் மீதான குற்றச்சாட்டை அவரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி நிராகரித்தார்.
தன் கட்சிக்காரருக்கு வழங்கப்பட்ட சிம் அட்டை பாகிஸ்தான் பிரஜையொருவருக்கு வழங்கப்பட்டதாகவும் எனவே அப்பாகிஸ்தான் பிரஜையே இதற்கு பொறுப்பு எனவும் வழக்குரைஞர் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி வாதாடினார். தனது கட்சிக்காரர் தொலைபேசி இணைப்பை துண்டிக்குமாறு கோரியும் அதை செய்வதற்கு இந்நிறுவனம் தவறிவிட்டது எனவும் அவர் கூறினார்.
அதேவேளை இத்தொலைபேசி அழைப்புகள் வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேற்படி பாகிஸ்தான் பிரஜையுடன் சந்தேக நபர் தொடர்புகொண்டிருந்ததாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரை தலா 500,000 ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் இவ்வழக்கை ஓகஸ்ட் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
.gif)
