Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013

இலங்கைத் தமிழர்கள் தமிழீழம் கோரவில்லை; ஐக்கியமாக வாழவே விரும்புகின்றனர்: சுஷ்மா

'இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மற்றும் தமிழ்க் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையே தமக்கு தேவை என்கின்றனர். அவ்வாறான இலங்கைக்குள்ளேயே அவர்கள் வாழ விரும்புகின்றனர்.

அப்படி இருக்கும் போது, தமிழக அரசியல் கட்சியினர் மாத்திரம் ஏன் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர் என்று புரியவில்லை' என இந்திய லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவரும் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை நான் சந்தித்தபோது, ஐக்கிய இலங்கையில் இருக்கத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள் என்பதையும் நேர்மையான அரசியல் தீர்வுதான் எங்களுக்குத் தேவை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்' என்றும் சுஷ்மா ஸ்வராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் மாநில மாநாடு, நேற்று வியாழக்கிழமை மதுரையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றியுள்ள சுஷ்மா கூறியுள்ளதாவது,

'இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய எனது தலைமையில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய மத்திய அரசாங்கத்தினால் முடிவு செய்யப்பட்டது.

இலங்கை சென்ற எங்கள் பயணம் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்ப்பதற்காக அல்ல. அது தமிழர்களின் நிலை குறித்து முழுமையாக அறிந்து கொள்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தமிழர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்தோம். பின்னர் இலங்கை ஜனாதிபதியிடம் இது தமிழர்களின் பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரச்சினை என்று கூறினோம். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்கவேண்டிய தேவை உள்ளது. இலங்கையிலுள்ள தமிழர்கள், தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கை தேவை என்று கூறும்போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? அதுதான் புரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை நான் சந்தித்தபோது, ஐக்கிய இலங்கையில் இருக்கத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள் என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், நேர்மையான அரசியல் தீர்வுதான் எங்களுக்குத் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்துத் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கு இணையான சம உரிமைகள், கௌரவமான வாழ்க்கை வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். அதிகாரப்பகிர்வு அமுலாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருந்தது.

எனவே தமிழர்கள் மத்தியில் நல்ல ஆதரவும், மதிப்பும் பெற்றுள்ள ஒரு தலைவர் அப்படிக் கூறுகையில், இங்குள்ள கட்சிகள் மட்டும் ஏன் தமிழ் ஈழத்தை வலியுறுத்த வேண்டும்?.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை எப்படி மதிக்கப்படுகிறதோ அதேபோலத்தான் நாம் இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மையை மதிக்க வேண்டும்.

இலங்கைக்கு சென்ற எம்.பிக்கள் குழுவில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. இது எம்.பிக்கள் மேற்கொண்ட சுற்றுலாப் பயணம் அல்ல. நாங்கள் இலங்கையில் சந்தித்த அத்தனை பேரும் தங்களது பிரச்சினைகளை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் எங்களிடம் தெரிவித்தனர்.

நான் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோது இலங்கைத் தமிழர்கள் குறித்து தமிழ்நாடு மட்டும் கவலைப்படவில்லை, மாறாக ஒட்டுமொத்த இந்திய தேசமும் கவலையுடன் உள்ளதாக உறுதிபடத் தெரிவித்தேன்.

இலங்கைத் தமிழர்களுக்கு நான் ஒரு இந்திய சகோதரி என்ற முறையில் அரசியல் உரிமைகளை அவர்கள் பெறும் வகையில் விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் கருத்தினை உறுதியாக இந்திய நாடாளுமன்றத்திலும்; தெரிவித்தேன்.

இலங்கை ஜனாதிபதி எனக்குக் கொடுத்த பரிசுப் பொருளை பெரிய விவகாரமாக்கி ஒரு பத்திரிக்கை என்னை சிறுமைப்படுத்தி விட்டது. அந்தப் பரிசு இந்திய ஜனநாயகத்திற்கு வழங்கப்பட்ட சிறிய கௌரவம். அதை நான் சுஷ்மா சுவாராஜாக வாங்கவில்லை.

மாறாக இந்தியாவின் பிரதிநிதியாகத்தான் வாங்கினேன். மேலும் அதனை நாடாளுமன்ற கருவூலத்திலும் சேர்த்து விட்டேன். அதை நான் எடுத்துக் கொள்ளவில்லை' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். (தற்ஸ்தமிழ்)
Views: 870

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.