.jpg)
(ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.சுக்ரி)
ஏறாவூர் 4ஆம் குறிச்சியைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான சாமித்தம்பி பூபாலரெட்ணம் என்பவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'03.08.2012 திகதி மாலை 5.30 மணியளவில் செங்கலடியில் உள்ள சம்பத் வங்கிக்கு அருகில் உள்ள முச்சக்கரவண்டித் தரிப்பிடத்திலிருந்து முச்சக்கரவண்டிச் சாரதியான சாமித்தம்பி பூபாலரெட்ணம் என்பவரின் முச்சக்கரவண்டிகையை வாடகைக்காக அமர்த்திச் சென்ற இனந்தெரியாத இருவர் அவரை பலமாகத் தாக்கிவிட்டு அநாதரவான நிலையில் காட்டுக்குள் விட்டுச் சென்றுள்ளனர். இதன் பின்னர் பொதுமக்கள் பொலிஸாருக்குக் வழங்கிய தகவலின்படி அவர் உயிர் ஆபத்து இன்றி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். முச்சக்கரவண்டியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேற்படி முச்சக்கரவண்டிச் சாரதி கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுக் கைவிடப்பட்ட இடம் ஏறாவூரில் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் எல்லைப் பிரதேசம் ஆகும். இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டவருக்கும் முஸ்லிம்களுக்கும் எதுவிதமான முரண்பாடுகளும் இருந்திருக்கவில்லை.
தாக்குதலுக்கு உள்ளான முச்சக்கரவண்டிச் சாரதியின் புதல்வர் சசிதரன் ஏறாவூர் நகரசபைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தற்போது ஆளும் நிர்வாகத்துடன் இணைந்து அபிவிருத்திப் பணி ஆற்றும் ஒரேயொரு தமிழ் உறுப்பினராக உள்ளார்.
தற்போது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் இக்காலகட்டத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவமானது அரசியல் பின்னணிகளைக் கொண்டிருப்பதாகவே கருதமுடிகின்றது. தமிழ் - முஸ்லிம் இனமுறுகலை இந்தப் பிரதேசங்களில் மீண்டும் ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேட எடுக்கும் முயற்சியாகவும் கருத இடமுண்டு.
எவ்வாறிருந்தபோதும் தமிழ் - முஸ்லிம் உறவு வலுப்பெற்று புரிந்துணர்வுடன் செயற்பட்டுவரும் தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய காட்டுமிராண்டிப் பிற்போக்குத்தனங்களை எமது சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
அத்துடன் தமிழ் - முஸ்லிம் பொதுமக்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானத்துடனும் பொறுமையுடனும் விழிப்புடனும் செயற்படவேண்டும் என பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
குறிப்பாக பொலிஸார் இந்த குற்றச்செயலுடன் சம்பந்தப்பட்ட சமூகவிரோதிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பூபாலரெட்ணம் விரைவில் குணமடையவேண்டும் என்று இந்தப் புனித றமழானில் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனது தந்தை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியானதும் சுதந்திரமானதுமான உள்நாட்டுத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயிடம் ஏறாவூர் நகரசபை உறுப்பினரான பூபாலரெட்ணம் சசிதரன் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'எனது தந்தை சாமித்தம்பி பூபாலரெட்ணம் (வயது 56) கடந்த 03.08.2012 அன்று மாலை 5.30 மணியளவில் தனது முச்சக்கரவண்டித் தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டியுடன் நின்றபோது 2 நபர்கள் முச்சக்கரவண்டியில் ஏறி தளவாய்ப்பக்கம் கூட்டிச்சென்று அவர் நினைவிழக்கும்வரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதன் பின்னர் அவரை ஏறாவூர் சத்தாம் ஹுஸைன் முஸ்லிம் கிராம எல்லையில் போட்டுவிட்டு முச்சக்கரவண்டியை சவுக்கடிப் பக்கம் எடுத்துச்சென்று தீ மூட்ட முற்பட்டுள்ளனர். பின்னர் அவ்விடத்தை விட்டுத் தப்பியோடியுள்ளனர்.
சத்தாம் ஹுஸைன் கிராமவாசிகள் ஏறாவூர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொலிஸார் உடன் விரைந்து சென்று அவரை அந்த இடத்திலிருந்து மீட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் அவர் அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இப்பொழுது அவர் அவசரசத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனது தந்தைக்கு இதுவரை எதிரிகள் யாரும் இருந்திருக்கவில்லை. ஆனால், நான் கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது ஏறாவூர் நகரசபைக்குப் போட்டியிட்டுத் தெரிவான ஒரேயொரு தமிழ் உறுப்பினர் ஆவேன். நான் தற்போதைய மாகாணசபைத் தேர்தலில் ஒரு கட்சி சார்பாகப் போட்டியிடுபவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றேன். எனக்கு பல கோணங்களில் இருந்து என்னை வீழ்த்த அரசியல் சக்திகள் சதிசெய்து வந்துள்ளனர். இருந்தும் என்னை அவர்களால் எதுவும் செய்துவிடமுடியவில்லை என்ற ஆக்ரோசத்தினால் எனது தந்தையைப் பழிவாங்கவும் சிலவேளை அவரை அழிக்கவும் முற்பட்டிருக்கலாம் என்று நான் கருதுகின்றேன். இது தேர்தல் காலமாகையால் அரசியல் ரீதியாக இனக்குழப்பங்களை ஏற்படுத்தவே இந்த நாசகார சக்திகள் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.gif)
