மட்டக்களப்பு மாவட்டத்தின் இருதயபுரம் பகுதியில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் 5 கைக்குண்டுகள் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இருதயபுரம் பகுதியிலுள்ள பொதுமயானத்திலிருந்து இக்கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரி ரஹீம் தெரிவித்தார்.
இக்கைக்குண்டுகள் விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு கொண்டுவந்து மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமெனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.
மீட்கப்பட்ட இக்கைக்குண்டுகள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்ட நிலையில், அவற்றை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளான லிவுலியந்த, சுகியான், மஜித், ரத்நாயக்க, பிரியங்கர ஆகியோர் இக்கைக்குண்டுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
.gif)
