(எஸ்.ஜெனி)
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22, 23, 24ஆம் திகதிகளில் தமிழ் செம்மொழி விழா இடம்பெறவுள்ளது. கடந்த ஜுலை மாதம் 17ஆம் திகதி சங்கத்தின் தலைவர் அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த செம்மொழி விழாவில் ஆய்வரங்க நிகழ்வுகளும் முத்தமிழ் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. முதல் நாள் காலையில், ஆய்வரங்க அமர்வும் மாலையில் இயற்றமிழ் (இலக்கிய) நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இரண்டாம் நாள் காலையில், ஆய்வரங்க நிகழ்வும் மாலையில் இசைத்தமிழ் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. மூன்றாம் நாள் காலையில் நாடகத் தமிழ் நிகழ்வுகளும் மாலையில் நிறைவு நாள் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இவ்விழாவில் ஆய்வரங்க நிகழ்வுகளில் இலங்கையின் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பலர் கலந்துக்கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிப்பர். மூன்று நாட்கள் இடம்பெறும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழ் விழாவில் மன்னார் மாவட்டத்தின் இலக்கியவாதிகள் கலைஞர்கள் அதிக அளவில் ஈடுப்படுத்தப்படுவர்.
நிறைவு நாள் நிகழ்வின்போது மன்னார் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. மன்னார் மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் கல்வி வலயங்கள் பாடசாலைகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் போன்ற அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று இச்செம்மொழி விழாவினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
.gif)
