Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 23 மே 2013

100 பில்லியன் டொலரை அண்மிக்கிறது பேஸ்புக்கின் பெறுமதி

உலகின் பிரபலமான சமூக இணையத்தளமான பேஸ்புக்கின் நிகர மதிப்பு 95 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகிறது என புதிதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்று தெரிவிக்கிறது. வெளியிடப்பட்டுள்ள இன்னுமொரு அறிக்கையின் படி அடுத்த வாரத்தில் பேஸ்புக் தனது பொதுப் பங்கு வெளியீட்டினை (ஐ.பி.ஓ) நடாத்தும் போது அதன் பெறுமதி ஏறத்தாழ 100 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேஸ்புக் நிறுவனத்தின் உருவாக்குனர்களில் ஒருவரும், அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஷக்கர்பேர்க்கின் சொத்து மதிப்பு அடுத்த வாரத்தில் ஏறத்தாழ 25 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பேஸ்புக்கின் அண்மைக்கால பெரு வளர்ச்சியையும், அதன் லாபமீட்டும் தன்மையையும் காட்டுவதாக அமைந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

2006ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வளர்ந்துகொண்டிருந்த போது உலகின் தேடுதற்பொறிகளில் ஒன்றாக யாகூ நிறுவனம், பேஸ்புக்கை ஒரு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு வாங்குவதற்கு முற்பட்டிருந்தது.

அப்போதைய நிலையில் அது பேஸ்புக்கிற்கு மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதப்பட்டிருந்த போதிலும், அதை பேஸ்புக் நிறுவனம் மறுத்திருந்திருந்தது.

தற்போது யாகூ நிறுவனத்தின் பெறுமதி 18.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகக் காணப்படும் நிலையில், பேஸ்புக்கின் மதிப்பு யாகூ நிறுவனத்தின் மதிப்பை விட 5 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது.

பேஸ்புக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் ஷக்கர்பேர்க்கின் சொத்து மதிப்பை விட யாகூ நிறுவனத்தின் மதிப்பு 6.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அதிகமாகக் காணப்படுகிறது.

அடுத்த வாரமளவில் தனது பொதுப் பங்கு வெளியீட்டினை நடாத்தவுள்ள நிலையில், ஒரு பங்கின் பெறுமதியாக 28 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 35 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை நிர்ணயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது பொதுப்பங்கு வெளியீடு தொடர்பான விளம்பரப்படுத்தல்களையும், தெளிவுபடுத்தல்களையும் பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே முழுமூச்சில் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. (க்ரிஷ்)
Views: 393

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.