Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
என்.கே. அஷோக்பரன் / 2018 மார்ச் 05 , பி.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 134)
ஜே.ஆர் சொன்ன, அமீர் மறுத்த இணக்கப்பாடு
சர்வகட்சி மாநாட்டின் இணைந்த குழுவின் கலந்தாய்வுகள், 1984 மார்ச் 15ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, 1984 மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டின் பொது அவையை மீண்டும் கூட்டி, இதுவரை நடந்த கலந்துரையாடல்களில் நான்கு முக்கிய விடயதானங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதென அறிவித்தார்.
முதலாவதாக, அரச முறைமை பற்றிய விடயத்தில், அரசின் சகல மட்டங்களிலும் மக்களின் பங்குபற்றலைச் சாத்தியமாக்கும் வகையில், மத்தியில் குவிந்த அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் இணக்கம் உருவாகியிருப்பினும், அரச முறைமை பற்றியும், எவ்வதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதிலும் இறுதியான புரிந்துணர்வு எட்டப்படவில்லை என்றார்.
இரண்டாவதாக, உள்ளூராட்சி விடயம் தொடர்பில், தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் உள்ளூராட்சி சபை முறைமையில், ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்தது போல, கிராம சேவகர் மட்டத்திலான கிராமோதய மண்டலங்களும், துணை அரசாங்க அதிபர் மட்டத்திலான தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் பிரதேச மண்டலங்களும் உருவாக்கப்பட இணக்கம் ஏற்பட்டுள்ளதெனவும், ஆயினும் தேர்தல் முறைமை முடிவாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மூன்றாவதாக, “நாடற்ற நிலையை” இல்லாதொழிக்கும் விடயம் தொடர்பில், மகாசங்கத்தினரின் முன்மொழிவின் அடிப்படையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதெனத் தெரிவித்தார். நான்காவதாக, இனரீதியான வன்முறை, பயங்கரவாதம் ஆகியன பற்றிய விடயத்தில், நாட்டின் சகல பாகங்களிலும் வன்முறைக்கான காரணங்களும், சகலவிதமான பயங்கரவாதமும் முற்றாக இல்லாதொழிக்கப்பட இணக்கம் ஏற்பட்டுள்ளதென அறிவித்தார்.
சர்வகட்சி மாநாட்டின் “இணக்கப்பாடு” பற்றிய ஜே.ஆரின் இந்த அறிவிப்பு, தமிழ்த் தரப்புக்கு பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக இருந்தது. ஏனெனில் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியிருந்த தமிழர் தரப்பு, குறிப்பாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும், எந்தவிதமான இணக்கப்பாட்டையும் அறிவித்திருக்கவில்லை.
தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், உடனடியாகவே ஜே.ஆரின் இணக்கப்பாடு பற்றிய அறிவிப்புக்கு தனது மறுப்பைத் தெரிவித்தார். தாமோ, தனது கட்சியோ எந்தவொரு இணக்கப்பாடு எட்டப்பட்டது பற்றி அறியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கு ஜே.ஆர் அளித்திருந்த பதில், அதிர்ச்சிகரமானது. “எனது முடிவுதான் இணக்கப்பாடு” என்று ஜே.ஆர் தெரிவித்தாரென, ரீ.சபாரட்ணம் பதிவுசெய்கிறார். இதைத் தொடர்ந்தான ஜே.ஆரினுடைய அடுத்த அறிவிப்பு, தமிழர் தரப்புக்கு மேலும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.
சர்வகட்சி மாநாட்டை 1984 மே 9ஆம் திகதி வரை, ஏறத்தாழ 7 வார காலத்துக்கு ஒத்திவைப்பதாக ஜே.ஆர் அறிவித்தார். இந்த நீண்ட ஒத்திவைப்புக்கு என்ன காரணம் என்று அமிர்தலிங்கம் வினவிய போது, குழுக்களின் அறிக்கைகள் தயார் செய்யப்படுவதற்கு இந்த கால அவகாசம் தேவைப்படுகிறது என ஜே.ஆர் பதிலளித்தார்.
தமிழ்த் தலைமைகளின் கையறுநிலை
தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள் என தமிழ்த் தரப்பினர், குறிப்பாக தமிழ் ஐக்கிய விடுலைக் கூட்டணி சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதை விரும்பவில்லை என்பதுடன், அதற்கான தமது எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தனர். இதனை வெறும் காலங்கடத்தும் செயலாகவே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பார்த்தன.
தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான காலத்தைப் பெறுவதற்கான ஜே.ஆரின் நடவடிக்கைதான் இந்த சர்வகட்சி மாநாடு என்பது, விடுதலைப் புலிகளின் கருத்தாக இருந்தது. ஆயினும் இந்திய அழுத்தத்தின் பெயரில், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இந்தச் சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியிருந்தது.
ஆனால் ஜே.ஆரின் நடவடிக்கைகள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கருத்தை நிரூபிப்பதாகவே இருந்தது. மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டை ஏழு வாரங்களுக்கு ஒத்திவைத்த ஜே.ஆர், மார்ச் 23ஆம் திகதி தேசிய பாதுகாப்பு அமைச்சு என்ற புதியதோர் அமைச்சை ஸ்தாபித்ததுடன், லலித் அத்துலத்முதலியை தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும், பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமித்தார்.
அதே மார்ச் 23ஆம் திகதி, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் குமார் பொன்னம்பலமும், சர்வகட்சி மாநாடு ஏழுவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பிலான தமது கண்டனத்தை வௌிப்படுத்தும் கடிதம் ஒன்றை ஜனாதிபதி ஜே.ஆருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
அந்தக் கடிதத்தில், “அரசாங்கமானது பங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் பெயரில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. அவ்வாறான தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாவார்கள் என்பதுதான் அந்த அச்சத்துக்குக் காரணம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஜே.ஆரின் தந்திரோபாயம் என்பது மிக இரகசியமாக, எவருக்கும் தெரியாமல் இருந்ததொன்றல்ல. அவரது காய்நகர்த்தல்கள், இராணுவ நடவடிக்கையை நோக்கித்தான் செல்கின்றன என்பதை, அமிர்தலிங்கமும் தமிழர் தரப்பும் நன்கறிந்தே இருந்தனர்.
ஆனால் இதற்குப் பொருத்தமான அரசியல் எதிர்வினையாற்றத்தக்க அரசியல் வலு, அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்களிடம் இருக்கவில்லை. ஏனெனில் தமிழ் அரசியல் தலைமைகளே, தமது பகட்டாரவார அரசியலால் விதையிட்டு, நீரூற்றி, முளைவிடச் செய்த தனிநாட்டுக்கான ஆயுதவழி என்ற அதே விடயத்தைதான், ஜே.ஆர் அரசாங்கம் தன்னுடைய தந்திரோபாயத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது.
இது, தமிழ் அரசியல் தலைமைகளின் ஒருவகையான நிர்க்கதி நிலை என்று சொன்னால் மிகையல்ல. ஏனென்றால் இந்தியா என்ற ஒரு விடயத்தை தவிர, ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேரம்பேசும் பலம் அவர்களிடம் வேறு இல்லை என்பதை அவர்களும் அறிவர், ஜே.ஆரும் அறிவார்.
ஜே.ஆருடைய எண்ணமும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எண்ணமும் ஒத்ததாக இருந்த நிலையில், இதனை மாற்றத்தக்க வலு தம்மிடம் இல்லை என்பதை, தமிழ்த் தலைமைகள் உணர்ந்தே இருக்க வேண்டும்.
தேசிய பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது
தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும், பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் லலித் அத்துலத்முதலி நியமிக்கப்பட்டமை தேசிய அரசியலில், குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள், இரண்டாம்கட்டத் தலைமைகளிடையேயான பனிப்போரை வலுப்படுத்துவதாகவும் அமைந்தது.
ஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில், ஜே.ஆருக்கு அடுத்த தலைமை என்பது பிரதமர் ரணசிங்க பிரேமதாசவாகவே இருந்தார். எளிய மக்களின் தலைவன் என்றறியப்பட்ட பிரேமதாச, பெரும் மக்கள் செல்வாக்குக்குச் சொந்தக்காரர். “மேட்டுக்குடியினரின்” கட்சி என்று ஐக்கிய தேசியக் கட்சி பற்றி இருந்த பொது அபிப்பிராயத்தை மாற்றியமைத்த ஒரே தலைமை, பிரேமதாசவினுடையது என்றால் மறுப்பதற்கில்லை.
ஜே.ஆருக்கும் பிரேமதாசவுக்கும் இடையிலான உறவு, சுமுகமானதொன்றாக இருக்கவில்லை. ஆனால் இருவரும் மற்றவரின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் நன்கறிந்திருந்தனர். அதன் விளைவாக அபிப்பிராயபேதங்கள், முரண்பாடுகள் இருந்த போதும், பிளவடையாது அவர்களின் பயணம் அமைந்தது.
இந்த நிலையில்தான் லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க ஆகிய இளம் தலைவர்களுக்கு, ஜே.ஆர் முக்கியத்தும் அளிக்கத் தொடங்கினார். லலித் அத்துலத்முதலி, சர்வகட்சி மாநாட்டின் பேச்சாளராக நியமிக்கப்பட்டார், அதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும், பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதைவிட, வௌிநாட்டுக் கொள்கை வகுப்பு தொடர்பில் வௌிநாட்டலுவல்கள் அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட்டை விட ஜே.ஆர், லலித் அத்துலத்முதலியின் உள்ளீட்டிலேயே நம்பிக்கை கொண்டிருந்தாரென, கே.எம்.டி சில்வா குறிப்பிடுகிறார்.
ஜே.ஆர் அரசாங்கத்தில், ஜே.ஆர், பிரேமதாச ஆகியோருக்கு அடுத்து, பலம்வாய்ந்த தலைவராக அத்துலத்முதலி கிட்டத்தட்ட உருவாகிக்கொண்டிருந்தார். இது, பிரேமதாசவுக்கு ஒரு சவாலாக மாறத் தொடங்கியது. மேலும் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பிரேமதாசவின் பங்கு பெரிதாக இருக்கவில்லை என்று குறிப்பிடும் கே.எம்.டி.சில்வா, அது ஒன்றில் ஜே.ஆரின் விருப்பின் பெயரில், அல்லது பிரேமதாச தானே விலகியிருந்ததன் பெயரில் நடந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.
ஆகவே நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் ஜே.ஆருக்கு அடுத்த இரண்டாம் நிலைத் தலைவராக, லலித் அத்துலத்முதலி உருவாகியிருந்தார். இந்த பிரேமதாச - அத்துலத்முதலி பனிப்போர் என்பது, இறுதியில் வௌிப்படையான முரண்பாடாக மாறியதைக் காணலாம்.
1983 “கறுப்பு ஜூலையின்” பின்னரான ஜே.ஆரின் தந்திரோபாய நகர்வின் அடுத்தகட்டம்தான், தேசிய பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டமையாகும். இராணுவக்கரம் கொண்டு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை இல்லாதொழிக்கும் இந்தத் தந்திரோபாயத்தின் முதற்படியாக, சர்வதேசத்திடமிருந்து ஆயுத உதவி கோரும் நடவடிக்கையை ஜே.ஆர் ஏலவே ஆரம்பித்திருந்த நிலையில், இராணுவத்துக்கு ஆட்சேர்க்கும் பணி, அத்துலத்முதலியின் முன்னாலிருந்த முக்கிய பணியாக அமைந்தது. அந்தக் காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தின் வலு, தொண்டர்படை உட்பட்டு ஏறத்தாழ 20,000 ஆகவே இருந்தது. இதனை உடனடியாக உயர்த்த வேண்டிய தேவை இருந்தது.
சுன்னாகம் சந்தைப் படுகொலை
மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு, மார்ச் 23ஆம் திகதி தேசிய பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்ட நிலையில்,1984 மார்ச் 24ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகள் குழு, பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து, 26ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் நடந்த இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும், ஒரு விமானப்படை வீரரும் கொல்லப்பட்டனர். விமானப்படை வீரரின் கொலைக்கான பதிலடியை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் அல்லாது, அப்பாவி தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய அநீதி, அடுத்த இரண்டு தினங்களில் நிகழ்த்தப்பட்டது.
1984 மார்ச் 28, ஒரு புதன்கிழமை. வாரம் மூன்று முறை கூடும் சுன்னாகம் சந்தை, வழமைபோல அன்றும் கூடியிருந்தது.
திடீரென்று சந்தைக்குள் ஜீப்களில் நுழைந்த விமானப்படையினர், அங்கு கூடியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். “பயங்கரவாதிகள்” நடத்திய தாக்குதலுக்குப் பதிலாக, அப்பாவி மக்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்துதல் “பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை” அல்ல, மாறாக “அரச பயங்கரவாதம்”.
சுன்னாகம் சந்தையில் நடந்த படுகொலைத் தாக்குதலில், 8 அப்பாவி உயிர்கள் பலிகொள்ளப்பட்டதுடன், ஏறத்தாழ 50 பேர் காயமடைந்தனர். 23ஆம் திகதி அமிர்தலிங்கமும், குமார் பொன்னம்பலமும் ஜே.ஆருக்கு எழுதிய கடிதத்தின் வரிகளை மீண்டும் நினைவு படுத்துங்கள்: “அரசாங்கமானது, பங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. அவ்வாறான தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பலியாவார்கள் என்பதுதான் அந்த அச்சத்துக்குக் காரணம்”.
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .