Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
என்.கே. அஷோக்பரன் / 2018 மார்ச் 26 , மு.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 137)
பிரேமதாஸவின் இந்திய எதிர்ப்பு
ஜே.ஆர் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இந்தியாவை வௌிப்படையாக எதிர்த்தவர்களில் முதன்மையானவர் பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ. “இலங்கையில் பிரிவினையை இந்தியா தூண்டிவிடுகிறது. பிரிவினைவாதிகளுக்குப் பயிற்சியளித்து, ஆயுதங்கள் வழங்கி, இலங்கையில் முளைவிட்டு வரும் பயங்கரவாதத்துக்குப் பின்னணியில் இந்தியா இருக்கிறது” என்று, அவர் தொடர்ந்து, இந்தியா மீது குற்றம் சுமத்தி வந்திருக்கிறார்.
“எங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதானால், எங்கள் நாட்டை விழுங்க விரும்பினால், ஒளிவுமறைவின்றி வௌிப்படையாக அதைச் செய்யுங்கள். அதைவிடுத்து, ஏன் இங்கு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறீர்கள்” என்று இந்தியாவை நோக்கி, பிரேமதாஸ தன்னுடைய நாடாளுமன்ற உரையொன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.
“சீக்கிய மற்றும் காஷ்மீர் பிரச்சினையை இரும்புக்கரம் கொண்டு கையாளும் இந்தியா, நாம் அப்படி நடக்கக்கூடாது என்று சொல்வது, இந்தியா இரட்டை நிலைப்பாட்டில் செயற்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது” என்று குறிப்பிட்ட பிரேமதாஸ, “எங்களுடைய பிரதான குற்றச்சாட்டானது, எங்களுடைய மக்கள், அங்கு சென்று, பயங்கரவாதப் பயிற்சி பெற்று, மீண்டும் இங்கு வந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட, இந்தியா அனுமதிக்கிறது என்பதாகும். நாங்கள் சீக்கியர்களை இங்கு வந்து, இந்தியா அரசாங்கத்துக்கு எதிராகப் போராடப் பயிற்சியளித்தால், இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? எம்மீது இந்தியா, குற்றம் சுமத்தியிருக்கும். ஆனால், நாம் ஒருபோதும் அதைச் செய்ய மாட்டோம். இன்னொரு நாட்டுக்கு எதிராகப் போர் புரியவோ, இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்கவோ எவரும், எமது மண்ணை மட்டுமல்ல, எம்முடைய எதையும் பயன்படுத்த நாம் அனுமதிக்க மாட்டோம். இதுதான் எங்கள் கொள்கை. அவ்வாறு மற்றநாடுகளும் நடந்துகொள்ளக் கூடாது என்று, நாம் எதிர்பார்க்கிறோம். எங்களுடைய முன்னுதாரணத்தை மற்றைய நாடுகள் பின்பற்ற வேண்டும்” என்று கடுந்தொனியில் பேசியிருந்தார்.
ஜே.ஆரின் தந்திரோபாயம்
ஒருவகையில், இது ஜே.ஆரின் இராஜதந்திர நகர்வுகளில் ஒரு பகுதி என்றுகூடச் சொல்லலாம். இந்திய அழுத்தத்தின் பெயரில்தான், சர்வகட்சி மாநாடு முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆகவே, இந்திய தலையீட்டுக்கும், அனெக்ஷர் ‘சி’க்கும் உள்நாட்டில் கடும் எதிர்ப்பிருக்கிறது. தனது அரசாங்கத்துக்கு உள்ளேயே, தனது கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பிருக்கிறது என்று காட்டுவதானது, ஜே.ஆர், தான் இதைச் செய்ய விரும்பினாலும், தனது அரசாங்கத்தின் ஆதரவில்லை என்பதை இந்தியாவுக்கு காட்டுவதற்கு இது வாய்ப்பளிக்கும் என்று ஜே.ஆர் கருதியிருக்கலாம்.
மறுபுறத்தில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு எதிரான பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டது. அதாவது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசுவதால் பயனில்லை; ஏனெனில் அவர்களால் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்களே தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பார்த்து, அச்சப்படுகிறார்கள் என்ற தொனியிலான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
இனப்பிரச்சினை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படக்கூடியதொன்றல்ல; மாறாக, இராணுவ ரீதியில் எதிர்கொள்ளப்பட வேண்டிய பயங்கரவாதப் பிரச்சினையே இது, என்று நிறுவுதலே எண்ணமாக இருந்திருக்கும் என்பது, ஊகிக்கக்கூடியதாக உள்ளது.
மறுபுறத்தில், இந்தியாவைத் தவிர்த்து, ஏனைய சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பணியை, ஜே.ஆர் முன்னெடுத்தார்.
சர்வதேச ஆதரவைத் திரட்டல், 1983 ‘கறுப்பு ஜூலை’ இனஅழிப்பைத் தொடர்ந்து இந்தியாவின் தலையீடு, இலங்கையில் ஏற்பட்டது முதலும், சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிரான குரல்கள் எழுச்சி பெறத் தொடங்கியது முதல், ஜே.ஆர் அரசாங்கம், சர்வதேச ரீதியில் தனக்கான ஆதரவைப் பலப்படுத்தும் முயற்சிகளை, கடுமையாக முடுக்கிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, இலங்கைக்கெதிரான அழுத்தங்களை சமன் செய்யவும், இலங்கை அரசாங்கம் எதிர்கொள்வது பயங்கரவாதப் பிரச்சினை என்பதை முன்னிறுத்தவும், அதை முன்னிறுத்தி, சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதற்காக ஜனாதிபதி ஜே.ஆர், தன்னுடைய சகோதரரும், மிகச் சிறந்த வழக்குரைஞருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவை, தன்னுடைய விசேட தூதுவராகப் பல நாடுகளுக்கும் அனுப்பியிருந்தார்.
இதைவிடவும், வௌிவிவகார அமைச்சராக இருந்த ஏ.ஸீ.எஸ். ஹமீட்டும் பல நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். மறுபுறத்தில், இராணுவ உதவிகளைப் பெறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக, பல ஆய்வாளர்களும் பதிவுசெய்கிறார்கள்.
குறிப்பாக, இஸ்ரேல், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இராணுவ மற்றும் புலனாய்வு ரீதியிலான உறவுகள் வளர்க்கப்பட்டன. இந்தியாவைத் தன்பக்கம் திருப்ப முடியாததை ஜே.ஆர் நன்கறிந்திருந்தார்.
இந்திரா காந்திக்கும், ஜே.ஆருக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையீனம் இருந்தது. ஆகவே, இந்தியாவைத் தவிர்த்து, ஏனைய நாடுகள் பலவற்றுடனான உறவுகளைப் பலப்படுத்தும் அணுகுமுறையை ஜே.ஆர் கையாண்டார்.
இஸ்ரேலுடன் பலமுற்ற உறவு
இஸ்ரேலுடனான இலங்கையின் உறவுகள் ஜே.ஆரின் காலத்திலேயே பலமாகின. அமெரிக்காவின் ஆதிக்கம் இதில் நிறையவே இருந்தது. குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றேகனின் விசேட தூதுவராக இலங்கை வந்த லெப்.ஜெனரல் வேர்னன் வோல்டேர்ஸ், இலங்கை, இஸ்ரேலை அங்கிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
மேலும், அமெரிக்காவூடாக, இஸ்ரேலிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெற்றுக் கொள்வதில், ஜே.ஆர் கவனம் செலுத்தினார், இதற்காக ஜே.ஆரின் மகன் ரவி ஜெயவர்தனவை, இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்திருந்தார் ஜே.ஆர்.
இந்த இணக்கப்பாடுகளின் அடிப்படையில், கொழும்பிலமைந்த அமெரிக்க தூதுவராலயத்துக்குள் இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவை ஸ்தாபிக்க இணக்கம் ஏற்பட்டிருந்தது.
ஜே.ஆர் இதை, அமைச்சரவையில் அறிவித்தபோது, அமைச்சர்களான
எம்.எச்.மொஹமட் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஏ.ஸீ.எஸ்.ஹமீட் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதும், ஜே.ஆர் இந்த விடயத்தை முன்னகர்த்திச் சென்றார்.
1984 மே மாதத்தில் இதற்கான உடன்படிக்கை கைச்சாத்தானதுடன், மே 24, அமெரிக்க தூதுவராயத்துக்குள் இஸ்ரேலிய நலன்களுக்கான பகுதி இயங்கத்தொடங்கியது.
ஜே.ஆரின் கிழக்காசிய விஜயம்
1984 மே 19 முதல் 31 வரை ஜனாதிபதி ஜே.ஆர், சீனா, ஜப்பான், மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்குக்கான தொடர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். மே 20ஆம் திகதி, சீனாவிலே சீன ஜனாதிபதி லீ ஸியன்னியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்போது, இலங்கை அந்நிய ஆக்கிரமிப்புக்கு ஆளாகலாம் என்ற அச்சத்தை ஜே.ஆர் வௌிப்படுத்தியிருந்தார். “நாம், அந்நிய ஆக்கிரமிப்பொன்றைச் சந்திப்போமானால், 15 மில்லியன் மக்களும் தமது உயிர் போனாலும், ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என்ற தனது வழமையான கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
தொடர்ந்து, சீனப் பிரதமர் ஜாவோ ஸியொங்கை சந்தித்த போதும், ஜே.ஆர், ஆக்கிரமிப்பு பற்றிய தனது கவலையைப் பகிர்ந்திருந்தார்.
அதற்குப் பதிலளித்த சீனப் பிரதமர், “எந்தவொரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டினுடைய உள்விவகாரங்களில் தலையிட உரிமையில்லை. உங்கள் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் உங்கள் முயற்சியை நாங்கள் உறுதியாக ஆதரிக்கிறோம். இலங்கையின் உள்நாட்டு நிலைவரத்தில் முன்னேற்றம் காணப்படுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். உங்களது தலைமையின் கீழ், உங்கள் நாட்டின் பிரச்சினைக்கு, நியாயமான தீர்வொன்றை நீங்கள் காண்பீர்கள் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. நான் மீண்டும் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இலங்கை தனது சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் இறைமையையும் முன்னெடுப்பதில், சீனா, இலங்கையோடு உடனிருக்கும்” என்றார்.
இதைத் தொடர்ந்து ஜே.ஆர், சீனாவிடம் முக்கியமானதோர் இராணுவ உதவிக் கோரிக்கையை முன்வைத்தார். “உள்நாட்டுப் பாதுகாப்பு நிலைவரம் என்பது, எங்களுக்கு மிகப்பெரியதொரு பிரச்சினையாக உள்ளது. இதற்காக நீங்கள், எங்கள் கடற்படைக்கு ஆறு ரோந்துப் படகுகளைத் தந்துதவியுள்ளீர்கள், இதையொத்த மேலதிக படகுகளை நீங்கள் தந்துதவினால், அது சட்ட விரோத குடிபெயர்வைத் தடுக்க உதவுவதோடு, வடக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளையும் தடுக்க உதவும்” என்று ஜே.ஆர் மேலதிக ரோந்துப் படகுகளுக்கான கோரிக்கையை, சீனப் பிரதமரிடம் முன்வைத்தார்.
அதற்கு சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தது. தொடர்ந்து அன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆலோசனைச் சபையின் தலைவராகவும், மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும், சீன அரசாங்கத்தின் மிகப் பலம்வாய்ந்த தலைவராகவும் இருந்த டங் ஷவோபிங்கைச் சந்தித்த ஜே.ஆர், “நீங்கள் முன்னர் தந்துதவியதைப் போலவே, தற்போதும் எம்மைத் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க துப்பாக்கி தாங்கிய படகுகளைத் தந்துதவ வேண்டும். அது எமது வடக்கு எல்லைக்கும், அதிலிருந்து வெறும் 20 மைல்களே தூரமான இந்திய எல்லைக்குமிடையில் நடக்கும் சட்டவிரோத குடிப்பெயர்வை தடுக்கவும் உதவும்” என்று வேண்டினார்.
சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய விஜயங்களின்போது, இராணும், தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு சார்ந்த உதவிகளை ஜே.ஆர் பெற்றிருந்தார் என்று சிலர் பதிவுசெய்கிறார்கள்.
ஜே.ஆர் ரோந்துப் படகுகளை வேண்டியதன் முக்கிய காரணங்களில் ஒன்று, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், படகு மூலம், வடக்கிலிருந்து தென்னிந்தியாவுக்குச் சென்று வருவதைத் தடுக்கும் நோக்கில்தான்.
இலங்கையின் உள்விவகாரத்தில் வேறுயாரும் தலையிடக் கூடாது, மேலும், இலங்கையின் ஆட்புலஒருமைப்பாடு என்பவற்றுக்குச் சீனா கிட்டத்தட்ட வௌிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருந்ததோடு, கணிசமான இராணு ரீதியிலான உதவிகளும் கிடைத்தன.
இது ஜே.ஆரைப் பொறுத்தவரையில் வெற்றிகரமான வௌிநாட்டு விஜயமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, தென் கொரியா மற்றும் ஜப்பான் விஜயங்களின் போது, இலங்கைக்கான கணிசமான நிதியுதவிகளை ஜே.ஆர் பெற்றுக்கொண்டிருந்தார்.
மீண்டும் கூடிய சர்வகட்சி மாநாடு
1984 ஜூன் முதலாம் திகதி, சர்வகட்சி மாநாட்டின் பிரதான அமர்வு, மீண்டும் கூடியது. இந்த அமர்வின்போது, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், வடக்கில் அதிகரித்து வந்த இராணுவத்தினரின் வன்முறைகள் பற்றி, சர்வகட்சி மாநாட்டில் பேசியதுடன், இனப்பிரச்சினைக்கான தீர்வொன்று எட்டப்படுவது தொடர்பில் அதிக கரிசனையுடன், வினைத்திறனான முயற்சிகளை எந்தத் தாமதமுமின்றி உடனடியாக, சர்வகட்சி மாநாடு முன்னெடுக்க வேண்டும் என்று கோரினார்.
சர்வகட்சி மாநாடு பற்றி, தமிழ் மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்திருந்த நிலையில், பல எதிர்ப்புகளையும் மீறி சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றிய அமிர்தலிங்கத்துக்கு இதன் மூலம் குறைந்தபட்சத் தீர்வையேனும் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையிருந்தது. அல்லாது போனால், அது ஜனநாயக வழியிலான தமிழ்த் தலைமையை அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, ஆயுதத்தலைமைகள் தமிழ் அரசியலில் முன்னணிக்கு வரவே வழிசமைக்கும் என்பதை அமிர்தலிங்கம் நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும்.
அமிர்தலிங்கத்தின் ஒரே பெரும் நம்பிக்கையாக இந்தியாவே இருந்தது. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மேற்குலகில் தமிழ் மக்களுக்கு ஆதரவான பிரசாரத்தை முன்னெடுத்து வந்தாலும், தமிழ்த் தலைமைகள், சர்வதேச ரீதியில் பலமான வகையில் தமக்கான ஆதரவைத் திரட்டுவதில், பெரும் முனைப்பைக் காட்டவில்லை என்பது இங்கு குறிப்பிட்டாக வேண்டியதொன்றாகும்.
ரஷ்யா, சீனா, ஜப்பான் என ஆசியாவின் பலம்பொருந்திய நாடுகளுடன் தமிழ்த் தலைமைகள் தமது உறவுகளை வளர்த்துக் கொள்ளவில்லை. ஜே.ஆர் செயற்படுவது போல, தமிழ்த் தலைமைகளால் செயற்பட முடியவில்லை என்பது உண்மை. ஆனாலும் இந்தியாவைத் தாண்டி தமிழ்த் தலைமைகள் யோசித்திருக்க வேண்டும்.
ஏனென்றால், இந்தியாவைப் பொறுத்தவரையில் அமிர்தலிங்கம் என்பது அவர்களுக்கு ஒரு தெரிவு மட்டும்தான்; மறுபுறத்தில், பல்வேறு ஆயுதத் தலைமைகளும் இந்திய ஆதரவுடன் வளர்ந்து வந்தன.
அமிர்தலிங்கத்தின் கோரிக்கைக் குரலுக்குச் செவிசாய்க்க ஜே.ஆருக்கு ஆர்வமிருக்கவில்லை. அவரது எண்ணம் முழுவதும், அடுத்து அவர் செல்லவிருந்த அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியாவுக்கான விஜயம் பற்றியே இருந்தது. இது அமிர்தலிங்கத்துக்குப் பெரும் அதிருப்தியைத் தந்ததோடு, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசிக்க வேண்டிய சூழலுக்கு, அமிர்தலிங்கத்தைத் தள்ளியது.
(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .