2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

அநாதையான அனெக்ஷர் ‘சி’யும் தொண்டாவின் தத்தெடுப்பும்

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஜனவரி 15 , மு.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 127)

அமிர்தலிங்கத்தின் மனத்தாங்கல்  

இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் நடந்த முதலாவது சர்வகட்சி மாநாடு, 1984 ஜனவரி 10ஆம் திகதி காலை 10 மணிக்கு, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.   

 சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத்துக்கான விஜயம் அளித்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் வௌிவராதவராகவே இருந்தார்.

சர்வகட்சி மாநாடு ஆரம்பிக்க முன்பு, ஊடகவியலாளர்களோடு உரையாடிய அவர், “எனது வாழ்நாள் முழுவதும், நான் அவர்களின் (தமிழ் இளைஞர்களின்) நாயகனாகவே இருந்துள்ளேன். இன்று அவர்கள், என்னைத் துரோகிகளாகப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதை, எனது மக்களுக்கு துன்பத்தையும் அழிவையுமே கொண்டுவரும். நான், அதைத் தவிர்க்கவே பார்க்கிறேன். ஆனால், இந்த விடயத்தில் ஜே.ஆர் எனக்கு உதவுவார் என்று நான் நினைக்கவில்லை. அவர், என்னைப் பலமிழக்கச் செய்து, ‘பெடியங்களை’ பலமுறச்செய்து, பின்னர் இராணுவபலத்தால் அழிக்கும் எண்ணத்தையே கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்ததாக, ரீ.சபாரட்ணம் பதிவு செய்திருக்கிறார்.   

இந்தக் கூற்றுக்குள், எத்தனை முரண்களும் உண்மைகளும் உள்ளடங்கியிருந்தன என்பதை காலங்கடந்த தரிசனம் உணர்த்துகிறது. தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ் இளைஞர்களிடம் விதைத்து உரம்போட்டது யார்? தமது அரசியல் எதிரிகள், தமிழ் இளைஞர்களின் ஆயுதங்களால் மௌனமாக்கப்பட்டபோது, கள்ள மௌனம் சாதித்தது யார்? தமிழீழம் காண, இளைஞர்கள் திரண்டுவர வேண்டும் என்று, அறைகூவல் விடுத்தது யார்? இவற்றின் பின்பு, ஆயுதவழியில் தனிநாடு காணும் முயற்சி, எமது மக்களுக்குத் துன்பத்தையும் அழிவையும் தரும் என்று சொல்லும்போது, அது முரண்நகையாகிவிடுகிறது.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனிநாட்டுக் கோரிக்கையை, ஒரு சிறந்த அரசியல் முதலீடாகக் கருதியிருந்திருக்கலாம். ஆனால், அது இளைஞர்கள் மத்தியில் வேரூன்றி, வளர்ந்து பரவி, இன்று தோப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில், தமது அரசியலை அது கடந்துவிட்டது என்னும் போதுதான், தாம் விதைத்ததன் பாரதூரத்தை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் உணரத் தொடங்கியிருந்தார்கள் என்று சொல்லலாம்.   

அமிர்தலிங்கம், உரம்போட்ட தனிநாட்டுக் கனவை, இனி அமிர்தலிங்கமே வேண்டினாலும் கலைத்துவிட முடியாத சூழல் உருவாகியிருந்ததுதான் அமிர்தலிங்கத்துக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஒரு வகையில் பார்த்தால், இதுபோன்றதொரு நிலையில்தான் பண்டாரநாயக்கவும் இருந்தார் எனலாம்.   

தனது அரசியல் இலாபத்துக்காக, தான் வளர்த்துவிட்ட சிங்களப் பேரினவாதத்திலிருந்து, அவர் விரும்பினாலும் கூட, வௌியே வந்துவிட முடியாத கண்ணிக்குள் சிக்கிய நிலையில், பண்டாரநாயக்க இருந்தார் என்ற கருத்தை ஒத்த நிலை. ஆனால், இதில் மிகமுக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம், வெறுமனே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் சொன்னதால் மட்டும், தமிழ் மக்களிடையே தனிநாட்டுக்கான வேட்கை உறுதிபெற்றது என்று சொல்ல முடியாது. அவர்கள், உரம் போட்டார்கள்.  

 ஆனால், இலங்கை அரசாங்கமும் பேரினவாதமும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள்தான், தமிழ் மக்களிடையே பிரிவினை எண்ணம் வேறூன்றக் காரணமாகின. 1983 ‘கறுப்பு ஜூலை’ இடம்பெற்றிராவிட்டால், ஜனநாயகத் தலைமைகளை மீறி, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றிருக்க மாட்டார்கள்.   

சர்வகட்சி மாநாடும் ஜே.ஆரின் தந்திரோபாயமும்  

ஜே.ஆர் மீது, அமிர்தலிங்கத்துக்கு நம்பிக்கை இருக்காவிட்டாலும், ‘இந்தச் சர்வகட்சி மாநாடு என்பது, ஒரு வரலாற்று நிகழ்வு; இது ஒரு திருப்புமுனை’ என்ற கருத்தைச் சர்வகட்சி மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர், அமிர்தலிங்கம் பதிவு செய்திருந்தார்.   

சர்வகட்சி மாநாட்டுக்கு வந்த அமிர்தலிங்கம் குழுவை, ஜே.ஆர் நீண்ட புன்னகையோடு வரவேற்றதாகவும் அதைப் பார்த்த எம்.சிவசிதம்பரம், “அவ்வளவும் நஞ்சு” என்று கருத்துரைத்ததாகவும் ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார். சர்வகட்சி மாநாடு பற்றி, ஜே.ஆருக்குப் பெருவிருப்பம் இருக்கவில்லை.   

அமிர்தலிங்கத்துக்கும், ஜே.ஆர் மீது நம்பிக்கையிருக்கவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் அழுத்தத்தின் பேரில், முன்னெடுக்கப்படுமொரு விடயமாகவேதான் சர்வகட்சி மாநாடு மாறியிருந்தது. ஆனால், ஜே.ஆரின் காய்நகர்த்தல்கள், இங்கு மிக அவதானமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. ‘ஆசியாவின் நரி’ என, தான் விளிக்கப்படுவதற்கான நியாயங்களை, ஜே.ஆர் மீண்டும் இந்தச் சர்வகட்சி மாநாட்டில் உணர்த்தியதைக் காணமுடிகிறது.    

சர்வகட்சி மாநாடாக இருந்தாலும், மத அமைப்புகளையும் உள்ளீர்த்திருந்தார் ஜே.ஆர். இதன் நோக்கம், பௌத்த மகா சங்கத்தை, இந்தச் சர்வகட்சி மாநாட்டின் பங்குதாரராக்குவதாகும். ஏற்கெனவே, ஜே.ஆருடனான சந்திப்பில், பௌத்த மகா சங்கத்தைச் சேர்ந்த முக்கிய பிக்குகள் அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளுக்கு எதிரான தமது நிலைப்பாட்டைப் பதிவு செய்திருந்த நிலையில், பௌத்த மகா சங்கத்தின் நிலைப்பாட்டை, ஜே.ஆர் ஏலவே அறிந்திருந்தார்.   

இலங்கையிலுள்ள ஏனைய மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பெயருக்கு அழைக்கப்பட்டாலும், அவர்கள் இந்தச் சர்வகட்சி மாநாட்டில், ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஒன்றுமில்லை. ஏனென்றால், வௌிப்படையாக இலங்கையில், கிறிஸ்தவ தேசிய அரசியலோ, இஸ்லாமியவாத அரசியலோ அல்லது இந்துத் தேசிய அரசியலோ அன்று நிலவவில்லை.   

ஆனால், சிங்கள-பௌத்த தேசியவாத அரசியல் மேலோங்கியிருந்தது. ஆகவே, ஒரு கிறிஸ்தவ பாதிரியாரதோ, இந்துப் புரோகிதரதோ, இஸ்லாமிய மௌலவியதோ நேரடி அரசியல் வகிபாகம் என்பது பூச்சியம் எனலாம். ஆனால், பௌத்த மகா சங்கம், இலங்கை அரசியலில் நேரடித் தாக்கத்தை செலுத்தத்தக்கது. இந்த யதார்த்தத்தின் ஊடாகத்தான், மதத்தலைமைகள் சர்வகட்சி மாநாட்டுக்கு அழைக்கப்பட்டதை நாம் நோக்க வேண்டும்.   

ஆரம்பத்திலேயே அதிர வைத்த ஜே.ஆர்  

சர்வகட்சி மாநாட்டின் ஆரம்ப உரையில் ஜே.ஆர், இந்தச் சர்வகட்சி மாநாட்டின் குறிக்கோள்கள் என்று குறிப்பிட்ட சில விடயங்கள் முக்கியமானவை. அது, ஜே.ஆரின் தந்திரோபாயத்தை வௌிப்படையாகக் கோடிட்டுக் காட்டுவதாக அமைந்தது.  
 முதலாவது குறிக்கோளாக அவர் குறிப்பிட்டது, நாட்டின் இறைமையையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்தல்.   

இரண்டாவதாக, ஒற்றையாட்சியின் தொடர்ச்சியும் ஆட்புல ஒருமைப்பாடும். மூன்றாவதாக, எல்லாவிதமான வன்முறையையும் ஒழிக்க, இணைந்து செயற்படுதல் என்று சர்வகட்சி மாநாட்டின் குறிக்கோள்களைக் குறிப்பிட்டவர், மறந்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற சொற்களையோ, அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகள் பற்றியோ வாய்திறக்கவேயில்லை.  

“என்னைப் பெடியங்களுக்கு எதிராகத் திருப்ப, ஜே.ஆர் முயல்கிறார்” என்று அமிர்தலிங்கம், கோபத்தோடு பார்த்தசாரதியிடம் சொன்னதை, இந்த இடத்தில் ஞாபகப்படுத்தலாம். சர்வகட்சி மாநாட்டின்போதும் ஜே.ஆர் அதைத்தான் செய்திருந்தார்.

ஏற்கெனவே, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதை, தமிழ் ஆயுதக் குழுக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கடுமையாக எதிர்த்திருந்த வேளையில், சர்வகட்சி மாநாடானது இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வைத் தனது குறிக்கோளாகக் கொள்வதற்கு மாறாக, ஒற்றையாட்சியைப் பாதுகாத்தல், வன்முறையை இணைந்து எதிர்த்தல் ஆகிய குறிக்கோள்களை முன்னிறுத்தி இருந்தது. இது, அமிர்தலிங்கத்தை முழுமையாகத் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக, நிற்க வைக்கும் தந்திரோபாயம் என்று பொருள் கொள்ளக்கூடிய விடயமே.  

 தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தனிநாட்டுக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கச் சித்தம் கொண்டிருந்த நிலையில், அந்த நிலைப்பாட்டுக்கு நேரெதிரான ஒற்றையாட்சி, வன்முறையை இல்லாதொழித்தல் ஆகியவற்றை ஜே.ஆர் சர்வகட்சி மாநாட்டின் கொள்கைகளாக முன்வைக்கும்போது, அந்த மாநாட்டில் அமிர்தலிங்கம் பங்குபற்றுவது, அமிர்தலிங்கம் மீதான, தமிழ் ஆயுதக் குழுக்களின் விசனத்தை, நிச்சயம் அதிகரிக்கவே செய்திருக்கும்.   

ஜே.ஆரின் தந்திரோபாயத்தை, அமிர்தலிங்கம் அறிந்திருந்தும், வேறொன்றும் செய்ய முடியாத நிலையிலிருந்தார் என்பது, ஒரு துன்பியல் நிலை. ஜே.ஆரின் பேச்சின் பின்பும் அமிர்தலிங்கம் அமைதியாகவே இருந்தார்.   

குமாரின் கேள்வியும் தொண்டாவின் தத்தெடுப்பும்  

சர்வகட்சி மாநாட்டில் தமிழர் தரப்பில் மூன்று கட்சிகள் கலந்துகொண்டிருந்தன. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவையாகும். 

முதல்நாள், அமிர்தலிங்கம் அமைதியாக இருந்தாலும், முதல்நாளே துடிப்பாக இருந்த குமார் பொன்னம்பலம், மிக முக்கியமான கேள்வியொன்றை, ஜே.ஆரிடம் முன்வைத்தார்.

 அனெக்ஷர் ‘சி’ பற்றிய கேள்வி அது. குமார் பொன்னம்பலத்தை அறிந்தவர்கள், அவரது பேச்சாற்றலையும் நன்கறிந்திருப்பார்கள். தனது தந்தையாரைப் போன்றே, ஒரு சிறந்த குற்றவியல் வழக்குரைஞரான குமார் பொன்னம்பலம், மும்மொழியிலும் செவ்வனே உரையாற்றக் கூடியவர். அத்தோடு, மிக நேரடியாகவும் சம்பந்தப்பட்டவருக்கு மிகவும் உறைக்கக்கூடிய வகையிலும் பேசும், எழுதும் சுபாவம் கொண்டவர்.  

அவர் கொல்லப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதிய திறந்த கடிதம், இதற்குப் பெரும் சான்றாகும். கிட்டத்தட்ட ஒரு சின்னக் குறுக்கு விசாரணை போன்றே, இந்தக் கேள்வி பதிலும் அமைந்திருந்தது.  

 அனெக்ஷர் ‘சி’யைச் சுட்டிக்காட்டிய குமார் பொன்னம்பலம், “இவை யாருடைய ஆவணங்கள்” என்று, ஜே.ஆரைப் பார்த்துக் கேட்டார். அதற்கு ஜே.ஆர், “அவை மாநாட்டின் ஆவணங்கள்” என்று பதிலளித்தார்.  

“அவற்றைத் தயாரித்தது யார்” என்று குமார் பொன்னம்பலம் வினவ, “மாநாட்டுச் செயலகம்” என்று ஜே.ஆர். பதிலளித்தார். அதைக் கேட்ட குமார் பொன்னம்பலம், “இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட எல்லா ஆவணங்களுக்கும் பெற்றோர் உள்ளனர். ஆனால், அனெக்ஷர் ‘சி’ மட்டும், அநாதையாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.   

இதன்போது குறுக்கிட்ட சௌமியமூர்த்தி தொண்டமான், அனெக்ஷர் ‘சி’ தன்னுடைய ஆவணம் என்று சுவீகரித்துக் கொண்டார். அநாதையாக இருந்த, ‘அனெக்ஷர் ‘சி’க்கு  தொண்டமான், தனது முதலெழுத்துகளை வழங்கினார். 

அனெக்ஷர் ‘சி’ என்பது, பார்த்தசாரதியுடனான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஜே.ஆரும் பார்த்தசாரதியும் இறுதியாக டெல்லியில் இணங்கிய முன்மொழிவுகளாகும்.   

நியாயப்படி அது, ‘ஜே.ஆர் - பார்த்தசாரதி’ இணக்கப்பாடாகத்தான் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை ஜே.ஆர் செய்யத் தயாராக இருக்கவில்லை.  தற்போது சௌமியமூர்த்தி தொண்டமான் என்ற தனிநபரின் ஆவணமாக, அது சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்தது. சர்வகட்சி மாநாட்டின் ஆரம்பக் கட்டமாக, அனைத்துக் கட்சிகளும் தமது ஆரம்ப உரைகளை ஆற்றவிருந்தன.  

 இந்தநிலையில், சர்வகட்சி மாநாட்டில் இருந்த தமிழர்களின் பிரதிநிதிகளான அமிர்தலிங்கம், குமார் பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர், இணைந்து செயற்படுவது தொடர்பிலான இணக்கப்பாடை எட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.  

 1984 ஜனவரி 19 ஆம் திகதி, அவர்களது ஆரம்ப உரைகள் நிகழ்த்தவிருந்த நிலையில், 18 ஆம் திகதி அவர்கள் தமக்கிடையேயான சந்திப்பொன்றை நடத்தி, அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு, இணைந்து அழுத்தம் வழங்கத் தீர்மானித்தனர்.    

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .