2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

அடையாளத்தை தொலைத்தும் மறந்தும் போன இனம்

என்.கே. அஷோக்பரன்   / 2018 ஜனவரி 29 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 129)

சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் ஆற்றிய உரையில், வடக்கு, கிழக்கில் பௌத்தம் பற்றிய சில முக்கிய கருத்துகள் உள்ளன. அதைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும், இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றையும் அந்தப் இனப்பிரச்சினைக்கான, தீர்வை எட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற விடயங்களையும் உணர்ந்துகொள்ள, இலங்கையின் ‘சிங்கள-பௌத்த’ வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் சுருக்கமாகவேனும் நோக்குதல் அவசியமாகிறது.  

சிங்களவர்கள்  

இலங்கையின் இனப்பிரச்சினையானது, மேலோட்டமாகச் சிங்கள - தமிழ் இனப்பிரச்சினையாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.   

ஆனால், இது முற்றுமுழுதாக ஏற்புடைய அடையாளப்படுத்தல் என்று கூறுவது கடினம். இலங்கையின் பெரும்பான்மை அடையாளமானது, ‘சிங்களம்’ என்ற இன அடையாளம் என்று சொல்வதை விட, ‘சிங்கள-பௌத்தம்’ என்ற இனம், மதக் கலப்பு அடையாளம் என்று குறிப்பிடுவதுதான் சாலப் பொருத்தமானது.  

 ஏனெனில், இலங்கையின் பெரும்பான்மை இன அடையாளமாக, ‘சிங்கள-பௌத்த’ அடையாளமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ள, சிங்கள இனம், சிங்கள மொழி, பௌத்தம் என்பவற்றை, இலங்கையின் வரலாறு என்று பொதுவாகக் கருதப்படுவதற்கு ஊடாக நோக்குதல் இங்கு அவசியமாகிறது.   

‘சிங்களம்’ என்பது ‘சிங்கத்தின் வழிவந்தவர்கள்’ என்று பொருள்தருவதாகவே பொதுவாக நம்பப்படுகிறது. இலங்கையின் வரலாறு கூறும், பிரதான நூல் என்று கருதப்படும் ‘மஹாவம்சம்’, பிரதானமாக சிங்களவர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் நூலாக அமைகிறது.  

 மஹாவம்சமானது விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கிறது. வங்காள இளவரசியான சுப்பாதேவி ஒரு சிங்கத்தினால் கைப்பற்றப்பட்டு, சிங்கத்தின் குகையில் அடைத்துவைக்கப்படுகிறாள். அந்தச் சிங்கத்துக்கும் சுப்பாதேவிக்கும் ஓர் ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றன(?!). அந்த ஆண் குழந்தையின் பெயர் சிங்கபாகு; பெண் குழந்தையின் பெயர் சிங்கசீவலி.   

சிங்கத்தின் குகையானது, ஒரு பெரும் கல்லால் மூடி வைக்கப்பட்டிருந்தது. சிங்கபாகு வளர்ந்ததும் தன் தாயான இளவரசி சுப்பாதேவியுடனும் சகோதரி சிங்கசீவலியுடனும் அந்தக் குகையிலிருந்து தப்பித்து, ஒரு கிராமத்துக்குச் சென்று வசிக்கிறான்.  

 அந்தச் சிங்கம் தனது மனைவியையும் பிள்ளைகளையும் தேடியலைந்தது கொண்டிருந்தது. அதன்போது, பல கிராமங்களுக்குள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்தது.   

சிங்கத்தின் அட்டகாசத்தால் மக்கள் துன்புறவே, அந்தச் சிங்கத்தைக் கொல்பவர்களுக்குப் பரிசு தருவதாக மன்னர் அறிவித்தார். பரிசைப் பெறத் திண்ணம் கொண்ட சிங்கபாகு, தனது தந்தையான சிங்கத்தை தேடிச் சென்றான். தனது மகனைக் கண்ட சிங்கம் வாஞ்சையோடு அவனருகில் வர, சிங்கபாகு தனது தந்தையான சிங்கத்தைக் கொல்கிறான்.   

பின்னர், சிங்ஹபுர என்ற இராஜ்ஜியத்தை ஸ்தாபித்து ஆட்சி புரிந்த சிங்கபாகு, தனது சகோதரியான சிங்கசீவலியை மணந்துகொள்கிறான். அவனுக்கு 16 இரட்டைக் குழந்தைகள் கிடைக்கின்றன. அந்தப் 16 இரட்டையர்களில் மூத்த இரட்டையர்தான் விஜயனும் அவன் இரட்டைச் சகோதரன் சுமித்தாவும் ஆவார்.

முடிக்குரிய இளவரசனான விஜயன் மிகவும் குழப்பம் விளைவிக்கும் முரட்டு இளைஞனாக இருந்தான். அவனும் அவனது தோழர்களும் மக்களுக்கு பெரும் தொல்லைகளை விளைவித்ததால், அவனைத் தண்டிக்க வேண்டும் என்று மக்கள், மன்னர் சிங்கபாகுவிடம் வேண்டினர்.   

தனது நாட்டில் குழப்பத்தை தவிர்க்க விரும்பிய சிங்கபாகு, விஜயனையும் அவனது தோழர்களையும் ஒரு கப்பலில் ஏற்றி அனுப்பிவைத்தார். அந்தக் கடல் பயணத்தின் இறுதியில், இலங்கைத்தீவின் ‘தம்பபன்னியை’ (தாமிரம் (செப்பு) நிறமுடைய மணல் பூமி என்பதனால் தம்பபன்னி என்றழைத்தனர் என்பார் சிலர்) வந்தடைந்தது.  விஜயன் வந்தடைந்ததும், இயக்கர் குல இளவரசியான குவேனியைக் காண்கிறான். 

குவேனியை மணக்கும் விஜயன், குவேனியின் உதவியுடன் இயக்கர்களின் நகரமான சிறிசவத்துவை அழிப்பதோடு, தம்பபன்னியில் தனது நகரை அமைத்து அங்கு குவேனியுடன் வாழ்கிறான்.    அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறக்கின்றன. விஜயனின் தோழர்கள் அநுராதகம், உஜ்ஜயினி, உபதிஸ்ஸகம, உருவெல மற்றும் விஜிதபுர ஆகிய நகரங்களை அமைத்து அங்கு வாழ்கிறார்கள்.   

இவற்றை இணைத்து, ஓர் அரசாக்க விரும்பியவர்கள் அதன் அரசனாக விஜயனை வேண்டுகிறார்கள். விஜயன் அரசனாக வேண்டுமென்றால் அரச வம்சத்தில் வந்த பெண்ணை அவன் மணக்க வேண்டும். அதற்காகக் குவேனியை அவன் விரட்டுகிறான்.   

குவேனி தனது பிள்ளைகளோடு விஜயனைப் பிரிந்து, இயக்கர்களின் மற்றொரு நகரான லங்காபுரவுக்குச் செல்கிறாள். விஜயனை மணக்க பாண்டிய வம்சத்திலிருந்து ஓர் இளவரசி பாண்டிய நாட்டிலிருந்து வரவழைக்கப்படுகிறாள். அத்தோடு விஜயனின் தோழர்களும் மணப்பதற்காக பாண்டிய நாட்டிலிந்து பெண்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.   

சிங்கபாகுவின் வழி வந்தவர்கள் ஆதலால் அவர்கள் தம்மைச் ‘சிங்களவர்’கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதிலிருந்துதான் சிங்கள இனம் தோன்றியது என்கிறது மஹாவம்சம். இன்னொரு நூலான தீப வம்சமும் இதே கதையைச் சொன்னாலும், அதில் ‘குவேனி’ என்ற பாத்திரம் கிடையாது.   

விஜயனின் வருகையானது கி.மு 543இல் இடம்பெற்றதாகத் தமது ஆய்வுக் கட்டுரையொன்றில் யக்கடுவே சுகுணசீல தேரரும் நிவந்தம தம்மிஸ்ஸார தேரரும் குறிப்பிடுகின்றனர்.   

ஆகவே, சிங்கள இனமானது கி.மு 543இற்குப் பின்னரே உருவாகிறது எனலாம். 38 ஆண்டுகள் ஆண்ட விஜயன் வாரிசின்றி இறந்துபோக, அவனுக்கடுத்ததாக ஆள்வதற்காக, இந்தியாவில் அமைந்திருந்த விஜயனின் சொந்த நாடான சிங்ஹபுரவை, அப்போது ஆண்டு கொண்டிருந்த விஜயனின் இரட்டைச் சகோதரனான சுமித்தாவின் இளையமகன் பண்டுவாசுதேவன், இலங்கை வருகிறான்.   

பண்டுவாசுதேவனோடு 32 மந்திரி புதல்வர்களும் வருகிறார்கள். பண்டுவாசுதேவனிலிருந்து சிங்கள வரலாறு தொடர்கிறது. மஹாவம்சம் கூறும் இதைக் கதையாகப் பார்த்தாலும், கவுதம் குமார் க்ஷத்ரியா தனது மரபணு ஆராய்ச்சியில் சிங்களவர்களின் மரபணுவில் 25.41சதவீதம் வங்காள மரபணுவின் பங்குண்டு என்கிறார்.   

சரப்ஜித் மஸ்தானா தனது மரபணு ஆய்வில் சிங்களவர்களின் மரபணுவில் 57.49சதவீதம் வங்காள மரபணுவின் பங்கிருப்பதாகவும் 42.51சதவீதம் தமிழ் மரபணுவின் பங்கிருப்பதாகவும் குறிப்பிடுகிறார். இவை எதுவும் முடிந்த முடிபுகள் அல்ல; எனினும், மஹாவம்சம் கூறும் கதைக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளன.   

சிங்கள மொழி  

சிங்கள மொழியானது, இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்தோ-ஆரிய மொழிப்பிரிவைச் சார்ந்த மொழியாக இன்று வகைப்படுத்தப்பட்டுள்ள மொழியாகும். சிங்கள மொழியைப் பொறுத்தவரை, அதன் பிராகிருத எழுத்துகள் கி.மு இரண்டாம் நூற்றாண்டு அளவுக்குப் பழைமையானது என்று சொல்லப்பட்டாலும், அதற்கான வலுவான ஆய்வுச் சான்றுகளைக் காணமுடியாதுள்ளது.  

 சிங்கள மொழியில் கிடைக்கப்பெற்றுள்ள மிகப் பழைமையான இலக்கியமானது ஒன்பதாம் நூற்றாண்டுக்குரியது என்று நம்பப்படுகிறது. ஆகவே, சிங்கள இனத்தின் தோற்றத்துக்கும் மொழியின் தோற்றத்துக்கும் இடையில் பாரிய இடைவெளிகளுண்டு. மேலும், மஹாவம்சம் உள்ளிட்ட நூல்கள், பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

 இலங்கையில் பௌத்தம்  

இலங்கையில் பௌத்த மதம், மௌரிய சாம்ராட்சியத்தின்  சக்கரவர்த்தியாக இருந்த அசோகனின் மகனான மஹிந்த தேரரினால், கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகச் சொல்கிறது வரலாறு.   

அன்று, அநுராதபுரத்தின் ஆட்சிபீடத்தில் இருந்தவன்  தேவநம்பியதீசன். இவன் பண்டுவாசுதேவனின் மகனான அபயவின் தங்கை மகனான பண்டுகாபயனின் மகனான மூத்தசிவனின் இரண்டாவது மகன். விஜயனின் வருகையிலிருந்து ஏறத்தாழ 240 வருடங்களின் பின்பு அரசனாகிறான் தேவநம்பியதீசன்.   

ஏறத்தாழ இந்த 240 வருடங்களிலும் பௌத்தம் இலங்கையில் இல்லை. சிங்கள இனம் என்று மகாவம்சம் அடையாளப்படுத்திய விஜயன் அவனது தோழர்கள் மற்றும் மதுரையிலிருந்து வந்த பாண்டிய இளவரசி மற்றும் அவளுடன் வந்த மதுரைப் பெண்களிலிருந்து தோன்றிய இனம் உண்டு.   

சிங்கள மொழி இருந்ததற்கான உறுதியான சான்றுகள் இல்லை. இந்த ஏறத்தாழ 240 ஆண்டு காலப்பகுதியில் ஒரு தனிமதத்தின் ஆதிக்கமல்லாது, பல்வேறு மதங்களும் நம்பிக்கைகளும் இருந்ததாகவும், அதிலும் குறிப்பாக இந்திய மதங்களின் செல்வாக்கு இருந்ததாகவும் தனது ‘இலங்கையின் பௌத்த வரலாறு’ பற்றிய நூலில் எச்.ஆர்.பெரேரா குறிப்பிடுகிறார்.  

 மஹிந்ததேரர் மற்றும் அவருடன் வந்தவர்களின் போதனையின்படி, தேவநம்பியதீசன் பௌத்தனாகிறான். அதைத் தொடர்ந்து மஹிந்த தேரரின் சகோதரியான சங்கமித்தை கொண்டு வந்த போதி (அரச) மரத்தின் கிளை அநுராதபுரத்தில் நாட்டப்படுகிறது. போதிமரத்தின் வளர்ச்சியோடு, பௌத்தமும் அநுராதபுர இராச்சியத்தில் வளரத்தொடங்கியது.   

பிக்கு சாசனம், பிக்குனி சாசனங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. துறவு மடங்கள் கட்டப்பட்டன. புத்தரின் வலது விலா எலும்பைச் சுற்றி தூபாராமய சைத்திய கட்டி எழுப்பப்பட்டது.   

தேவநம்பியதீசன், ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஆண்டான் என்கிறது வரலாறு. அவனுக்குப் பிறகு, அவனது சகோதரன் உத்தியன் அரசனாகிறான். இவனது காலத்திலேயே மஹிந்த தேரரும் சங்கமித்தையும் இயற்கை எய்துகின்றனர். உத்தியனது காலத்தின் பின்னர்தான், தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வந்த சேனன்-குத்திகன் என்ற இரு தமிழர்கள் 22 ஆண்டுகள் ஆண்டதாகவும் பின்னர் எல்லாளன்  46 ஆண்டுகள் இலங்கையை ஆண்டதாகவும் வரலாறு கூறுகிறது.   

வரலாற்றுச் சிக்கல்  

மஹாவம்சம் கூறும் சிங்கள இனம், பௌத்த மதம் ஆகிய இரண்டும் வேறுபட்ட காலங்களில் தோன்றியவை. சிங்கள மொழி அதிலும் பிற்பட்டது. அப்படியானால் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ள பெரும்பான்மை அடையாளமான ‘சிங்கள-பௌத்தம்’ என்ற இன-மத கலப்பு அடையாளம் எப்போது உருவாகிறது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.  

 இதைவிடவும் விஜயனும் அவனது தோழர்களும் கிழக்கிந்தியாவிலிருந்து தோன்றிய வங்காளிகள்; (சிங்கத்தை தவிர்த்து விடுவோம்). அவர்கள் மணந்து கொண்ட பெண்கள் மதுரையிலிருந்து வந்த பாண்டியர்கள்; அதாவது தமிழர்கள். ஆகவே, சிங்கள இனத்தின் தோற்றுவாய் என்பது வங்காள இனமும் தமிழ் இனமுமா என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.   

இந்தக் கேள்விகளுக்கான பதில்களும் மஹாவம்சத்திலுள்ள பல்வேறுபட்ட விடயங்களும் ஆய்வுப்பரப்பில் பல்வேறு வாதப்பிரதி வாதங்களுக்கு உட்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.  செனரத் பரணவிதான, ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன, கே.எம்.டி.சில்வா, ஸ்ரான்லி ஜே. தம்பையா, பேர்சேட் ஹய்ன்ஸ், கே.என்.ஓ. தர்மதாஸ, கணநாத் ஓபேசேகர, ஸ்டீவன் கெம்பர் ஆகியோரின் ஆய்வுகளும் கருத்துகளும் இந்த விடயப்பரப்பில் குறிப்பிடத்தக்கவை.   

இந்த வரலாறும், அடையாளங்களைப் பற்றிய பேச்சும் வாதமும், ஏன் அவசியமாகிறது? எல்லோரும் இந்த மண்ணில் குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள்.   

இன்றைய இனங்களானவை, காலவோட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கூர்ப்புகளின் விளைவாகத் தோன்றியவை என்ற நிலைப்பாடு மேம்பட்டிருக்குமானால், இந்த வரலாறு மற்றும் அடையாளங்கள் பற்றிய தேடலும் வாதப்பிரதிவாதங்களும் அத்தியாவசியம் அற்றதாகிறது.  


உதாரணத்துக்கு கனடா, அமெரிக்கா என்பவை, குடியேறிகளின் நாடு என்று தம்மை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கிறது. அங்கு பூர்வீகக் குடிகளாக இருந்து, இன்று சிறுபான்மையினராக உள்ள பூர்வீகக் குடிகளையே அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களாக ‘முதல் தேசம்’ (கனடா) என்றும் ‘பூர்வீக அமெரிக்கர்கள்’ (அமெரிக்கா) என்றும் அங்கிகரிக்கிறார்கள்.   

விஜயன் என்பவனின் வருகையோடு இலங்கையின் வரலாறு தொடங்குவதால் இது குடியேறிகளின் நாடு என்ற கருத்துருவாக்கம் முன்னிலை பெறுமானால், இந்த வாதப்பிரதிவாதங்கள் அவசியமற்றதாகிறது. ஆனால், ஒரு குறித்த இனத்தார் ‘தூய இன’ வாதத்தையும் ‘பூமி புத்திர’ வாதத்தையும் அதாவது தாம் ஒரு தனித்த கலப்பற்ற தூய இனமென்றும் தாம் மட்டுமே மண்ணின் மைந்தர்களென்றும் மற்றையோர் ‘வந்தேறுகுடிகளென்றும்’ வாதங்களை முன்வைக்கும் போது, வரலாறும் அடையாளங்கள் பற்றிய வாதப்பிரதிவாதமும் முக்கியம் பெறுகின்றன.  

குறிப்பாக, சிறுபான்மை இனங்களாக அவர்கள் கருதும் இனங்களின் வரலாறு பற்றியும் பூர்வீகம் பற்றியுமான தேடல்களும் கருத்துகளும் அவசியமாகின்றன.   

இந்த இடத்தில், இலங்கையின் வரலாறு பற்றிய மிகமுக்கிய ஆய்வாளர்களுள் ஒருவரான, செனரத் பரணவிதான சொன்ன ஒரு விடயம் குறிப்பிடத்தக்கது “இன்று சிங்களம் அல்லது தமிழ் பேசும் பெரும்பான்மையானவர்கள் நிச்சயமாக இந்நாட்டின் பூர்வீகக் குடிகளின் வழிவந்தவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பற்றி எமக்கு ஒன்றுமே தெரியாது”.   இலங்கையின் வரலாற்றை ஆராய்வது என்பது இந்தத் தொடரின் நோக்கமல்ல. ஆனால் ‘சிங்கள - பௌத்தம் எதிர் தமிழ்’ என்று உருப்பெற்றிருந்த இலங்கையின் இனப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள, இலங்கை வரலாற்றைப் பற்றிய குறைந்தபட்ச பரிச்சயமேனும் அவசியமாகிறது.   

‘சிங்கள-பௌத்தம்’ என்ற அடையளாப்படுத்தல்களுக்குள் தொலைந்துபோன ஓர் அடையாளத்தை, மறந்துபோன ஓர் அடையாளத்தைப் பற்றித் தனது சர்வகட்சி மாநாட்டு உரையில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கோடிட்டுக்காட்டியிருந்தார். அந்த அடையாளம் ‘தமிழ் பௌத்தம்’.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X