ரமழான் பாவமன்னிப்பை பெற்றுத்தரும் மாதமாகும். இந்த புனித மாதத்தில் உள்ளத்தை விட்டும் பாவக்கறைகளை போக்க சிறந்த வழிமுறை தௌபாவாகும். அதாவது பாவங்கள் செய்வதை விட்டு விட்டு இறைவனை முழுமையாக சார்ந்து விடுவதாகும். தௌபா என்றால் மீள்தல், திரும்புதல் என்பது மொழி கருத்தாகும்.
புரிபாஷை கருத்தில் ஒரு மனிதன் உள்ரங்கமாகவும் வெளிரங்கமாகவும் இறைவன் வெறுக்கக்கூடியவற்றிலிருந்து அவன் விரும்பக்கூடிய விடயங்களின் பால் திரும்பிவிடுதல் என்பதாகும்.
தௌபா என்பது ஒரு மனிதன் தான் ஏற்கனவே பின்பற்றி வரும் ஒரு வாழ்க்கை முறையிலிருந்து புதியதோர் வாழ்க்கை முறையை நோக்கி மீள்வதாகும். இந்த மாற்றம் வெறுமனே வாயால் மொழியும் வெற்று வார்த்தையாக இருக்க முடியாது. இந்த மாற்றம் அவனது அறிவு, உணர்வு மற்றும் செயற்பாடு என்பவற்றில் ஏற்பட வேண்டும்.
இந்த மாற்றத்தினூடாக அவனது இலக்கிலும், செயற்பாடுகளிலும், நிலைப்பாடுகளிலும் பூரண மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஏற்படும் மாற்றம் தான் உண்மையான தௌபாவாகும். .jpg)
அனைத்து மனிதர்களும் தவறிழைப்பதே தௌபாவிற்கான தேவையை உணர்த்தும் பிரதான காரணியாக விளங்குகின்றது. 'ஆதமின் அனைத்து சந்ததிகளும் தவறிழைப்போர்களே. அத்தவறிழைப்போர் களுள் மிகவும் சிறந்தவர்கள் தனது இரட்சகனிடம் பாவமன்னிப்பு கேட்டு மீண்டுவிடுபவர்களாவர்'. எனும் நபி(ஸல்) அவர்களின் கூற்று இதனையே குறிப்பிடுகின்றது.
இவ்வாறு மனிதர்கள் தவறிழைப்பதற்கு அவர்களது அறியாமை, கட்டுக்கடங்காத மனோ இச்சையின் தாக்கம் மற்றும் அவனது சூழற்காரணிகளின் தாக்கம் என்பன காரணமாக அமைகின்றன.
பாவங்கள் செய்யும் மனிதன் அவனது பாவங்களை விட்டுவிட்டு தனது இரட்சகனிடம் மீள்வதால் அவன் இவ்வுலகிலும் மறுஉலகிலும் பல்வேறுபட்ட நலன்களைப் பெற்றுக்கொள்கின்றான். ஒரு மனிதன் தௌபா செய்து மீள்வதால் தனது இரட்சகனுக்கு கட்டுப்படல் எனும் உயர்ந்த பண்பை கொண்டவனாகிறான். தௌபா செய்வது அவனது ஈருலக வெற்றிக்குமான வழியாக அமைகின்றது.
அதனால் இறைநெருக்கம் கிடைக்கின்றது. நரகத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு சுவனத்தில் நுழைவிக்கப்படுகிறான். அவனது தீமைகள் நன்மைகளாக மாற்றப்படுகின்றன. இவ்வுலகில் சுபீட்சமான வாழ்வு கிடைக்கின்றது..jpg)
எனவே ஒரு மனிதன் தான் செய்யும் பாவங்களிலிருந்து விடுபட்டு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இறைவனும் அவனது தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் காட்டிய முறையில் நாம் தௌபா செய்ய வேண்டும். இந்ததவகையில் இஸ்லாத்தில் தௌபாவிற்கான நான்கு நிபந்தனைகள் காணப்படுகின்றன.
1. இறைவனுக்கு என்ற தூய எண்ணத்தோடு தௌபா செய்தல்.
2. தான் செய்த பாவங்களை விட்டுவிட்டு அவற்றை விட்டும் முற்றுமுழுதாக நீங்கிய நிலையில் தௌபா செய்தல்.
3. தான் செய்த பாவங்களை எண்ணி வருந்தி அதற்காக கை சேதப்படல்.
4. செய்த பாவம் சக மனிதனோடு தொடர்புபட்டிருந்தால் அவனிடம் மன்னிப்பு வேண்டிய நிலையில் இறைவனிடம் நெருங்க வேண்டும்.
இத்தகைய நிபந்தனைகள் பூர்த்தியாகும் போதே அது பரிபூரண தௌபாவாக அமைகிறது. ஒரு மனிதன் இறைவனுக்காக தனது உள்ளத்தை தூய்மைப்படுத்திக்கொண்டு தான் செய்த பாவங்களை நினைத்து வருந்தி அந்த பாவங்களை விட்டும் தன்னை முழுமையாக நீக்கிக்கொண்டு நல்ல விடயங்களின் பால் விரைந்து செயற்பட வேண்டும்.
தனது மனோ இச்சைக்கு புறம்பாக தனது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு இறைவனை முழுமையாக சார்ந்து பிரார்த்தித்தால் அது அவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனையாக அமையும்.
இவ்வாறு ஒரு மனிதன் தௌபா கேட்டு இறைவனிடம் மீண்டும் விட்டால் அவனுடைய நிலை முன்னிருந்தையும் விட சீர்பெற்றுவிடும். சிறு பாவமொன்றை நினைத்தால் கூட அவனுள்ளத்தில் இறையச்சம் ஏற்படும்.
தனது இறைவன் முன் பணிவுள்ளவனாய் இருப்பான். பெருமை அவனை விட்டும் நீங்கிவிடும். அவ்வாறே அவனது உறுப்புக்கள் இறைவன் தடுத்தவற்றை செய்வதை விட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்கும். எமக்கு மரணம் எப்போது ஏற்படும் என்பதே இறைவனே அறிவான். எமது வாழ்க்கையின் ஒவ்வொரு பொழுதிலும் நாம் இறைவனை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
தௌபா கேட்பதை பிற்போட கூடாது. தௌபாவை பி;ற்போடுவதும் அதனை விட்டும் பொடுபோக்காக இருப்பதும் ஷைத்தானின் ஊசலாட்டமாகும். எனவே எமக்கு கிடைத்துள்ள இப்புனித ரமழான் மாதம் நாம் தௌபா செய்வதற்கான பல சிறப்பான நேரங்களை சுமந்து வந்துள்ளது. எனவே இந்த சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்வோம்.
பாவங்களை, மனோஇச்சையை விட்டுவிட்டு இறைவனிடம் மீண்டுவிடுவோம். பகலில் பாவம் செய்வோரை மன்னிப்பதற்கு இரவிலும், இரவில் பாவம் செய்வோரை மன்னிப்பதற்கு பகலிலும் இறைவன் காத்துக்கொண்டிருக்கிறான். இறைவனின் ரஹ்மத்தையும் பாவ மன்னிப்பையும் நோக்கி விரைந்திடுவோம். யா அல்லாஹ் எம்மை உண்மையான தௌபா கேட்டு மீண்டோரின் கூட்டத்தில் சேர்த்துவிடுவாயாக. ஆமின்.
ஆக்கம்:
எம்.எச்.எம்.ஷப்கான்
இறுதி ஆண்டு – மாணவர்
ஜாமியா நளீமியா கலாபீடம் பேருவளை
.gif)