2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

அதிர்ந்தது மெக்ஸிக்கோ; 217 பேர் பலி

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்கெனவே பூமியதிர்ச்சியையும் சூறாவளியையும் ஏனைய இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொண்டுவந்த மெக்ஸிக்கோ, மீண்டுமொரு மோசமான இயற்கை அனர்த்தத்தை, இலங்கை நேரப்படி நேற்றுக் காலை எதிர்கொண்டது. 7.1 றிக்டர் அளவில் பதியப்பட்ட பூமியதிர்ச்சி, அந்நாட்டைத் தாக்கிய நிலையில், குறைந்தது 217 பேர் பலியாகினர்.

மெக்ஸிக்கோவில், 1985ஆம் ஆண்டு இடம்பெற்ற மாபெரும் பூமியதிர்ச்சி, குறைந்தது 10,000 பேரைக் காவுகொண்டிருந்தது. அந்தப் பூமியதிர்ச்சியின் 32ஆவது ஆண்டு நிறைவிலேயே, இந்தப் பூமியதிர்ச்சி இடம்பெற்றது.

பூமியதிர்ச்சியின் ஆண்டு நிறைவு நாளில், வருடாந்தம், தேசிய பூமியதிர்ச்சி ஒத்திகை இடம்பெறும் நிலையில், அந்த ஒத்திகைக்கு இடம்பெற்று இரண்டு மணித்தியாலங்களில், உண்மையான பூமியதிர்ச்சி தாக்கியது.

மெக்ஸிக்கோவின் தலைநகரான மெக்ஸிக்கோ நகரத்தையே பிரதானமாகத் தாக்கிய இந்தப் பூமியதிர்ச்சி, றோமா, கொன்டெஸா, டொக்டொரெஸ் போன்ற பிரதேசங்களையும் தாக்கியது.

பல பிரதேசங்களில், கட்டடங்கள் எல்லாம், தரைமட்டமாகிக் காணப்பட்டன.

கட்டங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் தொடர்கின்ற நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் குறிப்பாக, ஆரம்பநிலைப் பாடசாலையொன்றின் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில், அதற்குள் காணப்பட்ட 21 சிறுவர்கள் பலியாகினர். அந்தக் கட்டடத்துக்குள் இருந்து, 11 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட அதேவேளை, இன்னும் 30 தொடக்கம் 40 பேர் காணப்படுகின்றனர் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை, உயிருடன் மீட்க முடியுமா என்பதே, தற்போதைய கேள்வியாக மாறியுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாகவே விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி என்றிக் பேனா நியேட்டோ, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென எச்சரித்தார். “துரதிர்ஷ்டவசமாக, சிறுவர்கள் உள்ளிட்ட அதிகமானோர், உயிர்களை இழந்துள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

இந்த அழிவுகளைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், மீட்புப் பணியாளர்கள் தமது பணிகளைச் செய்வது, ஒத்துழைப்பு வழங்குமாறு, மக்களிடம் கோரினார்.

இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடரப் போவதாகத் தெரிவித்த, அந்நாட்டின் அனர்த்த நிவாரணப் பிரிவு, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தது. நாட்டின் பல மில்லியன்கணக்கான மக்களுக்கு, மின்சார விநியோகமும் தடைப்பட்ட போதிலும், இலங்கை நேரப்படி நேற்று இரவு, 3.4 மில்லியன் பேரின் மின்சார விநியோகம், சீராக்கப்பட்டுள்ளது. இன்னும், சுமார் 1.5 மில்லியன் பேருக்குரிய மின்சார விநியோகம், சீராக்கப்பட வேண்டியுள்ளது.

இம்மாதத்தின் 7ஆம் திகதி, மெக்ஸிக்கோவில் ஏற்பட்ட 8.1 றிக்டர் அளவிலான பூமியதிர்ச்சி காரணமாக, 98 பேர் பலியானதோடு, 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இம்முறை பூமியதிர்ச்சி தாக்கிய பகுதியில் அது இடம்பெற்றிருக்காவிட்டாலும் கூட, அந்தப் பூமியதிர்ச்சியின் தாக்கங்களிலிருந்து நாடு வெளிவர முன்னர், இன்னும் பயங்கரமான தாக்கத்தை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணொளி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X